உரத்திற்காக தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்
விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலை பகுதி விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொத்மலை வயல் பகுதியில் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அகில இலங்கை விவசாய சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் உர தட்டுப்பாட்டால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உளக்குமுறல்களாக வெளிப்படுத்தினர்.
விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் வழங்கப்படாததால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் அனைவரும் விவசாயத்தை கைவிட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், அரசாங்கம் இந்த விடயத்தில் தனது பிடிவாத போக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்திய விவசாயிகள் உரத்துக்காக தேங்காய் உடைத்து இறைவனிடம் முறைப்பாடு செய்தனர்.






