விவசாயிகளின் கருத்துக்கள் பெறப்படாது தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன : டக்ளஸ் (video)
கிளிநொச்சி - இரணைமடுக் குளத்தின் கீழான சிறு போகச் செய்கை தொடர்பிலான தீர்மானங்கள் பெரும்பான்மையான விவசாயிகளின் கருத்துக்கள் பெறப்படாது எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று (01-04-2023) முற்பகல் கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக் குளத்தின் இவ்வாண்டுக்கான சிறுபோகச் செய்கை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களினால் பின்தங்கிய பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள்
குறிப்பாக கல்மடுக்குளத்தின் கீழான விவசாயிகளுக்கு இரணைமடுக் குளத்தின் கீழ் 500 ஏக்கர் வழங்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளால் கடந்த 27ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விவசாயிகளுடன் கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதில் சிறுபோக நெற்செய்கை மற்றும் இட ஒதுக்கீடுகள் நிர்ப்பங்கீடுகள் தொடர்பில் விவசாயிகளின் கருத்துக்கள் பெறப்படாது ஒரு சிலரால் தன்னிச்சியான முடிவுகளை எடுத்து தங்களுடைய பயிர் செய்யும் உரிமைகளை தடுத்துள்ளாக இதன்போது விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
குறிப்பாக கல்மடுக்குள விவசாயிகளுக்கு நீர்ப்பங்கீடுகள் வழங்கப்பட்டது தொடர்பாகவும் குறிப்பாக காலப்போக அறுவடை நிறைவு பெறுவதற்கு முன்னதாக கடந்த ஆண்டிலேயே சிறுபோக செய்கைக்கான கூட்டம் மேற்கொண்டு அதற்கான தீர்மானங்கள் எடுத்தமை என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெரும்பான்மையான விவசாயிகளின் கருத்து
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், பெரும்பான்மையான விவசாயிகளின் கருத்துக்கள் பெறப்படாமலேயே தீர்மானங்கள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் உணர முடிகின்றது.
எனவே ஏனைய விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில்
தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா. தேவரதன் மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியிலாளர் கருணாநிதி, இரணைமடு நீர்பாசன பொறியியலாளர் எஸ் . செந்தில்குமரன் கமநல சேவை நிலையங்களின் பெரும்பாக உத்தியோகத்தர்கள் விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
