புதிய விவசாய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாடு முழுவதும் மிளகாய் உற்பத்தி - விவசாய அமைச்சு (Photos)
அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் எதிர்வரும் மூன்று வருடங்களில் நாட்டிற்கு தேவையான 80வீத மிளகாயை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் காய்ந்த மிளகாய்த் தேவையில் 90% க்கும் அதிகமானவை இறக்குமதி செய்யப்படுவதாகவும், இலங்கைக்கு மிளகாயை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் 52 பில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் மிளகாய்
நமது நாட்டில் வருடாந்த மிளகாய்த் தேவை 52,500 மெட்ரிக் தொன் ஆகும், அதில் 5,000 மெட்ரிக் தொன்கள் மாத்திரமே இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. எஞ்சிய 47,500 மெட்ரிக் தொன்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதனை கருத்தில் கொண்டு, புதிய விவசாய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாடு முழுவதும் மிளகாய் செய்கை திட்டம் அரச மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வருடத்திற்குள் நாட்டின் மிளகாய்த் தேவையில் 20% உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டு அமைச்சு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அடுத்த மூன்று வருடங்களில் 80% மிளகாய்த் தேவையை அரச மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன் எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய விவசாய தொழில்நுட்பம்
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, மெல்சிறிபுர பிரதேசத்தில் 36 ஏக்கரில் பயிரிடப்பட்ட வெற்றிகரமான மிளகாய் செய்கையை பார்வையிட்டுள்ளார். இந்தப் பகுதியில் 75 ஏக்கரில் மிளகாய் பயிரிட ஒரு நிறுவனம் திட்டமிட்டுள்ளது, அதில் 36 ஏக்கரில் ஏற்கனவே புதிய விவசாய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்கை செய்யப்பட்டுள்ளது.
சொட்டு நீர் பாசன முறை, பாதுகாப்பு வலைகள் மற்றும் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான தொழில்நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்தி அரை ஏக்கர் மிளகாய் செய்கை மூலம் நிறுவனம் ஏற்கனவே ரூ.16 முதல் 20 மில்லியன் வரை வருமானம் ஈட்டியுள்ளது.
மிளகாயில் 20% நம் நாட்டிலேயே உற்பத்தி
விவசாய அமைச்சின் விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தினால் சுமார் 800 ஏக்கரில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது.தனியார் ஏற்கனவே சுமார் 3000 ஏக்கரில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிர்களின் மொத்த விளைச்சலின்படி, இந்தாண்டு இறுதிக்குள் நம் நாட்டுக்குத் தேவையான மிளகாயில் 20% நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இயன்றவரை இளைஞர் சமூகத்தைப் பயன்படுத்தி மிளகாய்ச் செய்கைக்குத் தேவையான சகல வசதிகளையும் வழங்குவதற்கு விவசாய அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.