பின்தங்கிய கிராம மக்களின் அவல நிலை! அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கும் விவசாயிகள்
மேட்டு நில பயிர்செய்கை விவசாயிகளுக்கு டீசல், உரம், கிருமிநாசினி மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை உடனடியாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு ஆயித்தியமலை உன்னிச்சை, ஒளியமடு பிரதேச மேட்டு நில பயிர்செய்கை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒளியமடு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் சங்கத்தின் தலைவர் பொன்னுத்துரை திலீபன் தலைமையில் புதன்கிழமை (21.09.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விவசாயிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மூலப்பொருள் பிரச்சினை
விவசாயிகள் மேலும் கூறுகையில், “விவசாயத்திற்கு அதை செய்கின்றோம் இதை செய்கின்றோம் என அரசியல்வாதிகள் ஊடகங்களில் தெரிவிக்கின்றனர். ஆனால் எதுவும் இதுவரை கிடைத்ததில்லை.
எமது வாழ்வாதார தொழிலான விவசாயத்தை முன்னெடுத்து எமது வாழ்க்கையை நடத்தி வருகின்றோம். இதற்கமைவாக இந்த மாத இறுதியில் பயிர்செய்கை செய்வதற்கான ஆயத்தங்களை செய்துவரும் நிலையில் நிலத்தை உழுவதற்கு உழவு இயந்திரத்தை நாடிசென்றால் டீசல் கொண்டுவந்தால் உழுது தருவதாக உழவு இயந்திர உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டீசல் வாங்க சென்றால் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் விவசாயம் செய்கின்றவர்களுக்கு டீசல் தருவதில்லை என கூறுகின்றனர். அரசாங்கம் மேட்டு நில பயிர்செய்கை செய்ய வேண்டும் என கூறுகின்றது. ஆனால் உரம், கிருமிநாசினி, டீசல், மண்ணெண்ணெய் போன்றன எமக்கு கிடைப்பதில்லை.
யானை தாக்குதல்
இவ்வாறு இந்த ஆயித்தியமலை உன்னிச்சை ஒளியமடு பிரதேசம் எல்லா விடயங்களிலும் பின்தங்கி காணப்படுகின்றது. அத்துடன் யானைகளின் ஊடுருவலால் யானை தாக்குதலுக்கு உள்ளாகி பலர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் வீடுகளை சேதமாக்கியும் பயிர்செய்கைகளை அழித்தும் வருகின்றன. இந்த பிரதேசத்தில் மின்சாரம் இல்லாத பல குடும்பங்கள் விளக்கு கொளுத்துவதற்கு கூட மண்ணெண்ணெய் இல்லாமல் இரவில் இருட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
போசாக்கு குறைப்பாடு
தற்போது போசாக்கு குறைவடைந்த கர்ப்பிணி தாய்மார்கள் அதிகமாக இருக்கின்றனர்.
அவ்வாறே குழந்தைகளும் போசாக்கு இல்லாத நிலையில் இருக்கின்றனர். இதனை அதிகாரிகள்
கவனத்தில் கொண்டு உதவுமாறும் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு உரிய மூலப்பொருட்களை அரசாங்கம் பெற்று தர வேண்டும்” என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.