சிறுபோக அறுவடைக்கு டீசல் பெற்றுத்தருமாறு கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் (Video)
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக அறுவடைக்கு டீசல் பெற்றுத்தருமாறு கோரி விவசாயிகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று(22) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு மனு ஒன்றும் விவசாயிகளால் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் சிறிமோகன் வருகை தந்து விவசாயிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
மனு கையளிப்பு
இந்த கலந்துரையாடலில், குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட தரப்புடன் பேசி விரைவான நடவடிக்கை எடுப்பதாக அவர் விவசாயிகளிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அறுவடைக்கு தேவையான டீசல் கிடைக்காதவிடத்து, தாம் காலபோக செய்கையை மேற்கொள்ளபோவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாய சம்மேளனத்தின் செயலாளர் கருத்து
சிறுபோக அறுவடை இடம்பெற்று வரும் நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்திற்கு டீசல் கிடைக்கப்பெறவில்லை. இதனால் விவசாய செய்கைகளை கால்நடைகள் சேதமாக்கும் அபாயம் காணப்படுகின்றது என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் சிவமோகன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் “அறுவடையை விரைவாக மேற்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுபோக செய்கையை முழுமையாக நிறைவு செய்ய முடியாக எமது விவசாயிகள், காலபோக
செய்கை தொடர்பில் பரிசீலிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.




