ஆற்றைக் கடக்க முற்பட்டபோது தவறி வீழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு சந்திவெளியையும் திகிலிவெட்டையையும் இணைக்கும் ஆற்றைப் பாதையின் ஊடாக கடந்து வயலுக்குச் சென்று வீடு திரும்பியபோது பாதையிலிருந்து தவறி ஆற்றில் வீழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சித்தாண்டி 2ம் பிரிவைச் சேர்ந்த 45 வயதுடைய பாக்கியராசா மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் இன்று (27) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வழமைபோல குறித்த ஆற்றைச் சந்தி வெளியிலுள்ள பாதையின் ஊடாக கடந்து திகிலிவெட்டை பிரதேசத்திலுள்ள வயலுக்கு இன்று காலை சென்றுள்ளார்.
பின் அங்கிருந்து சுமார் 4 மணிக்குக் குறித்த பாதையூடாக வீட்டிற்குச் செல்வதற்காகக் கடந்தபோது வலிப்பு ஏற்பட்டதையடுத்து பாதையிலிருந்து தவறி ஆற்றில் வீழ்ந்துள்ளார்.
இவ்வாறு வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



