ஈஸ்டர் தாக்குதல் குறித்து கார்டினல் முன்கூட்டியே அறிந்திருந்தாரா!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்கூட்டியே அறிந்திருந்தார் பிரசாரம் பொய்யானது என கொழும்பு மறைமாவட்டம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட நாளன்று, கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை காலை திருப்பலியில் கலந்து கொள்ளவில்லை எனவும், குண்டுவெடிப்பு குறித்த முன்கூட்டிய தகவலே அதற்கான காரணம் எனவும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை மற்றும் அப்பட்டமான பொய் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கார்டினலின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் குறித்து விசேட பாதுகாப்புப் பிரிவினருக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், அதன் மூலம் கார்டினலின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த அதிகாரிகள் வழியாக அவருக்கும் இத்தகவல் தெரிந்திருந்தது எனவும் சமூக ஊடகங்களில் திட்டமிட்ட வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் கார்டினல் ஆண்டகைக்கோ அல்லது கொழும்பு ஆயர் இல்லத்திற்கோ அரசாங்கத்தினால் எந்தவொரு விசேட பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னரே கார்டினலுக்கு அரசாங்கம் பாதுகாப்பை வழங்கியது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு முந்தைய நாள் இரவில், கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் நள்ளிரவைத் தாண்டி, அடுத்த நாள் அதிகாலை 2 மணி வரை நடைபெற்ற பிரதான ஆராதனைகள் மற்றும் திருப்பலிகளில் கார்டினல் ஆண்டகை பங்கேற்றிருந்தார்.
அதன் காரணமாக, உயிர்த்த ஞாயிறு அன்று காலையில் அவர் கொழும்பு ஆயர் இல்லத்திலேயே தனது காலைத் திருப்பலியை நிறைவேற்றினார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் பின்னாலுள்ள உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்கும், உண்மையான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளைத் திசைதிருப்பவும், அவற்றை முடக்கவுமே இத்தகைய இழிவான பொய்ப் பிரசாரங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் இவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 15 மணி நேரம் முன்
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri