ஊழியர்களிற்கு ஏற்பட்ட தொற்றுக்கு பெருந்தொகை நட்ட ஈட்டினை அந்த தொழிற்சாலை வழங்க வேண்டும் - கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள்
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கு ஏற்பட்ட தொற்றுக்குப் பெருந்தொகை நட்ட ஈட்டினை அந்த தொழிற்சாலை வழங்க வேண்டும் எனவும் இவ்வாறான பாதிப்பினால் ஏற்படும் இழப்புக்களிற்கு மாவட்ட அரசாங்க அதிபர்களும், சுகாதார ஊழியர்களுமே பொறுப்பு கூற வேண்டும் எனவும் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் சார்பில் ஊடக சந்திப்பொன்று இன்று கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது பொது அமைப்புக்கள் சார்பில் கருத்து தெரிவித்த கரைச்சி மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர் கருப்பையா ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றைய முடிவுகளின் படி புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் 310 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவ்வாறு குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணும் வரை அந்த நிர்வாகம் சரியாகக் கையாளவில்லை. அவர்களிற்கான பி.சி.ஆர் உள்ளிட்ட விடயங்களைச் சரியான முறையில் கையாண்டிருந்தால் இவ்வளவு பெருந்தொகையான தொற்றாளர்கள் அடையாளம் கண்டிருக்கமாட்டார்கள்.
குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதற்குக் காரணம் அந்த நிர்வாகமேயாகும். பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களிற்குக் குறித்த ஆடைத்தொழிற்சாலை நிறுவனம் பெருந்தொகையான நட்ட ஈட்டினை வழங்க வேண்டும்.
கம்பஹாவில் தொற்று ஏற்படும் போது கண்டு கொள்ளவில்லை. புதுக்குடியிருப்பில் தொற்று அதிகரித்துள்ள போதிலும் ஏனைய நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலைமை மோசமாகி உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படுமாக இருந்தால் மாவட்டத்தில் ஏற்படும் இழப்பிற்கு மாவட்ட அரசாங்க அதிபர்களும், சுகாதார தரப்பினரும் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் நாள் ஒன்றுக்கு இரண்டாயிரத்தைத் தாண்டும் அளவிற்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றார்கள். இது பாதகமான நிலையை மாவட்டத்தில் ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டிய தேவை மிக முக்கியமாக இருக்கின்றது.
மக்கள் அவ்வாறு பாதுகாப்பான முறையில் நடந்துகொண்டு இருக்கின்ற போதும், வடமாகாணத்தில் இதற்கு மாறான சில நிகழ்வுகள் இடம்பெறுகின்றது. இந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் 310க்கு மேற்பட்டவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலை காணப்படுகின்றது.
இந்த நிலையைப் பார்க்கின்றபோது வடமாகாணம் பாரிய அழிவை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பது போன்றதான அச்ச நிலை தோன்றுகின்றது. ஏற்கனவே நாங்கள் எமது இனத்தின் ஒரு பகுதியை இழந்து நிற்கின்றோம்.
இந்த நிலையில் கோவிட் தொற்று பரவலினால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டால் கணிசமான தமிழர்கள் இல்லாது போகும் நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலையை நாங்கள் அவதானிக்க முடிகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் சுமார் 2000க்கு மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கின்றார்கள். எமக்கு இருக்கின்ற சமூகப் பொறுப்பு வாய்ந்த பார்வையின் ஊடாக பார்க்கின்றபோது இங்கிருக்கின்ற ஆடைத்தொழிற்சாலைகள் இரண்டிலும், புதுக்குடியிருப்பில் இருக்கின்ற ஆடைத்தொழிற்சாலை போன்று தொற்று பரவுமானால் கிளிநொச்சி கடுமையான பாதிப்புக்குள்ளாகும்.
ஆகவே இதனைச் சாதாரணமான விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த மாவட்டத்தின் அக்கறையுள்ள குடிமகன் என்ற வகையில், நாங்கள் இந்த விடயங்களை ஊடகங்கள் வழியாகச் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றோம்.
அவ்வாறான ஆபத்தான நிலையைத் தடுப்பதற்கு இங்குள்ள சுகாதாரத் துறையினருக்கும், மாவட்ட அரசாங்க அதிபருக்கும் முக்கியமான பொறுப்பாக இருக்கின்றது. அண்மையில் மூன்று நாட்கள் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்திலும் குறித்த ஆடைத்தொழிற்சாலை இயங்கியதாகவே அறியக்கிடைக்கின்றது.
உண்மையில் தொற்று பரவாமல் இருப்பதற்காகவே பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததே தவிர, வேறு காரணங்களிற்காக அல்ல. குறித்த பயண கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைப்பதற்குக் குறித்த ஆடைத்தொழிற்சாலைகளின் நிர்வாகம் பணியாளர்களிற்கு அனுமதிக்கவில்லை. அப்போதைய சூழலிலும், இன்றும் அவர்கள் வேலைக்குச் சென்றிருக்கின்றார்கள்.
குறித்த ஆடைத் தொழிற்சாலைகளில் அபாயகரமான தொற்று உருவாகுமாக இருந்தால் அது எமது மாவட்டத்தையே அழித்துவிடும். தொற்று வருமுன்னே எமது மாவட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் அல்லது சொற்பமாக வந்ததை அடியோடு அழிக்க வேண்டுமென்றால் உடனடியாக கிளிநொச்சியில் இருக்கின்ற இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளையும் மூட வேண்டும்.
அதேவேளை நீண்ட காலமாக பணியாளர்களாக இருந்த அவர்களிற்குச் சம்பளத்துடனான விடுமுறையைக் குறித்த ஆடைத்தொழிற்சாலைகள் அவர்களிற்கு வழங்க வேண்டும். அதேவேளை அனைத்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கும் பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் மாவட்டத்தில் எவ்வாறான தொற்று நிலை காணப்படுகின்றது என்பது தொடர்பில் அறிய முடியும்.
அவ்வாறு இல்லாது அசமந்த போக்காக இருந்தால் மாவட்டத்திற்கு பாரிய அழிவு நிலை தோற்றம் பெறும். மாவட்டத்தில் தொற்று அபாய நிலை முழுமையாக நீங்கும்வரை குறித்த இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பது இன்றைய முக்கியமான நிலைப்பாடாக உள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மாவட்ட சுகாதாரத் துறையினரும், அரசாங்க அதிபரும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என அன்பாகவும், தயவாகவும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
மாவட்டத்திற் பாதுகாப்பிற்கும், நோய்
பரவலிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கும் குறித்த ஆடைத்தொழிற்சாலை விடயம்
முக்கிய இடம் பிடிக்கின்றது. இவ்விடயம் தொடர்பில் அனைத்து தரப்பும் கவனம்
செலுத்த வேண்டும் எனவும் அவர் குறித்த ஊடக சந்திப்பில் கருத்து
தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
