துபாய் கடற்கரை அருகே எண்ணெய் கப்பலுக்கு அருகில் வெடிப்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாய் கடற்கரையிலிருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த எண்ணெய் கப்பலுக்கு அருகே வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.
அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது ஏவப்பட்ட பொருள் (Unknown Projectile) ஒன்று கப்பலுக்கு மிக அருகில் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கப்பலின் தலைமை அதிகாரி இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து UKMTO அமைப்பிடம் அறிவித்துள்ளார்.
சர்வதேச கடல்சார் பாதுகாப்பு தொடர்பில் கவனம்
எனினும்,கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.கப்பலுக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், குறித்த கடல் பகுதியில் பயணிக்கும் அனைத்து கப்பல்களும் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாகத் தகவல் வழங்குமாறும் UKMTO எச்சரிக்கை விடுத்துள்ளது.
துபாய் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு தொடர்பில் கவனத்தை ஈர்த்துள்ளது.