நிறைவேற்று அதிகாரம் முற்றாக ஒழிக்கப்படக்கூடாது - மகாநாயக்கர்கள் கூட்டாக ஆலோசனை
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்கும் திருத்தச்சட்டங்கள் நிறைவேற்றப்படக்கூடாது என்று மகாநாயக்கர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச இன்று கண்டியில் அஸ்கிரி - மல்வத்து மகாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டபோது இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முப்படைகளின் பிரதானியாக ஜனாதிபதி தொடர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் 13ம் திருத்தச் சட்டம் இந்நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. அதைத் தடுப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தால் மாத்திரமே சாத்தியப்படும்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க கூடாது
சுயாதீன ஆணைக்குழுக்கள் சுதந்திரமாக செயற்பட வேண்டும். அதற்காக ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதே போன்று தற்போதைக்கு பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே முக்கியமானது.
அதற்குப் பதிலாக அரசியலமைப்புத் திருத்தம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளித்தால் பொருளாதார நெருக்கடி மீண்டும் அதிகரித்து விடும் என்றும் மகாநாயக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்போது நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாடு தற்போதைக்கு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அதன் காரணமாக சமூக அமைப்பில் சீர்குலைவும், இளைஞர்களின் அதிருப்தியும் மேலோங்கியுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்குமாறு கோரிக்கை
இவற்றை போக்க ஒரே வழி அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து அதனை நாடாளுமன்றம் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு பகிர்வதாகும்.
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் நாடாளுமன்றத்துக்கு வந்து நிதியமைச்சராகி இந்த நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக சீர்குலைத்துவிட்டார். அதனை நிவர்த்தி செய்யும் பணிகள் தற்போதைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் அரசியல்வாதிகளின் வேண்டுகோளின் பிரகாரம் நியமனம் பெற்ற பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் இடமாற்றங்கள் அனைத்தையும் ரத்துச் செய்யுமாறு நீதியமைச்சர் என்ற வகையில் நானும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளோம் என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.