மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம் (Video)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் பல்வேறுபட்ட விவாதங்களுக்கு மத்தியில் 10 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்தை அங்கீகரிப்பதற்கான விசேட அமர்வு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இன்று நடைபெற்றது.
மாநகரசபையின் சம்பிரதாயங்களுடன் ஆரம்பமான அமர்வின்போது மாநகரசபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு விசேட உரையாற்றப்பட்டது.
கோவிட் அச்சுறுத்தல், நிர்வாக சீர்கேடுகள் காரணமாக மாநகரசபையின் வருமானங்கள் முழுமையாக ஈட்டப்படாத நிலையிலும் பொதுமக்களுக்கான அபிவிருத்திகளை முழுமையாக நடைமுறைப்படுத்தமுடியாத நிலையிலும் இந்த வரவு செலவு திட்டத்தினை சமர்ப்பிப்பதாக முதல்வரினால் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த வரவு செலவு திட்டம் மற்றும் மாநகரசபையின் கடந்தகால செயற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருந்தது.
இதனை தொடர்ந்து குறித்த வரவு செலவு திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் 37பேர் இன்றைய அமர்வில் கலந்துகொண்டிருந்த நிலையில் 23பேர் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாகவும் 13பேர் எதிராகவும் வாக்களித்த அதேநேரம் ஒருவர் வாக்கெடுப்பில் நடுநிலை வகித்த நிலையில் 10 மேலதிக வாக்குகளினால் மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.








