ஐரோப்பிய கிண்ணத்தை சுவீகரித்தது இத்தாலி
புதிய இணைப்பு
யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஐரோப்பிய நாடுகள் கலந்து கொள்ளும், யூரோ 2020 கால்பந்து தொடர் கடந்த மாதத்தில் இருந்து நடைபெற்று வந்த நிலையில், இந்த தொடருக்கான இறுதிப் போட்டி பிரித்தானியாவின் உள்ளுர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆரம்பமானது.
இந்த இறுதிப் போட்டி, லண்டனில் இருக்கும் வெம்லி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி மோதின.
கடந்த 1966-ஆம் ஆண்டுக்கு பின், அதாவது 55 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து ஒரு மிகப் பெரிய கால்பந்து தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், ஒட்டு மொத்த தேசமும் இந்த வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், போட்டி துவங்கிய இரண்டாவது நிமிடத்திலே இங்கிலாந்து வீரர் Luke Shaw அற்புதமாக கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 1-0 என்று முன்னிலை வகித்தது. இவர் கோல் அடித்தவுடன் அந்த லண்டன் மைதானமே கரகோஷத்தில் அதிர்ந்தது.
அதுமட்டுமின்றி இதுவரை யூரோ தொடரின் இறுதிப் போட்டியில் எந்த ஒரு அணியும் 1.57 நிமிடங்களுக்குள் கோல் அடித்ததே இல்லை. இதனால் 2 நிமிடங்களுக்கு கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை Luke Shaw படைத்தார்.
அதன் பின் இரு அணிகளுமே கோல் போட பல முயற்சிகள் மேற்கொண்டும், இரு அணி வீரர்களும் அனல் பறக்கும் வேகத்தில் விளையாடினர்.
ஆட்டம் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்க, இங்கிலாந்து 1-0 என்று முன்னிலையில் இருந்ததால், நேரத்தை மட்டும் ஓட்டினால் போதும் என்பது போல் இங்கிலாந்து வீரர்கள் விளையாட துவங்க, அந்த அசந்த நேரத்தில், அதாவது 83-வது நிமிடத்தில், இத்தாலி வீரர் leonardo bonucci கோல் அடித்தார்.
இதனால் இங்கிலாந்து வீரர்கள் சிலர் இந்த கோலுக்கு தலையில் கையை வைத்த படி இருந்தனர். போட்டியின் முடிவில்(90 நிமிடம்) இரு அணிகளுமே ஆட்ட நேர முடிவில் 1-1 என்று சம நிலை வகித்தது.
கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. இந்த கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காத காரணத்தினால், போட்டி அடுத்த கட்டமான பெனால்ட்டி ஷுட்டிற்கு சென்றது.
இதில், கொடுக்கப்பட்ட 5 பெனால்ட்டி ஷுட்டில், இத்தாலி 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று, யூரோ 2020 சாம்பியன் என்ற பட்டத்தை பெற்றது. சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்ததால், இங்கிலாந்து ரசிகர்கள் பலரும் கடும் சோகமடைந்தனர்.
மூன்றாம் இணைப்பு
யூரோ 2020 காற்பந்து உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி லண்டன் வெம்பிளி மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இத்தாலி ஒரு கோலை தன் வசமாக்கியுள்ளது.
இத்தாலிக்கு எதிராக ஆடும் இங்கிலாந்து ஏற்கனவே ஒரு கோலை தன்வசம் ஆக்கியுள்ள நிலையில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் ஆட்டம் தொடர்கிறது.
இரண்டாம் இணைப்பு
யூரோ 2020 காற்பந்து உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி லண்டன் வெம்பிளி மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இங்கிலாந்து ஒரு கோலை தன் வசமாக்கியுள்ளது.
எதிரணியான இத்தாலி பூச்சியம் என்ற கணக்கில் இருப்பதுடன் ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
மேலும் இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றிப்பெற வேண்டும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முதலாம் இணைப்பு
யூரோ 2020 காற்பந்து உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி லண்டன் வெம்பிளி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
55 ஆண்டுகால வரலாற்றில் இங்கிலாந்து இதுவரை ஒரு முறைகூட யூரோ கோப்பையை வென்றதில்லை. இந்நிலையில் காற்பந்து தொடரை ஏற்று நடத்தும் இங்கிலாந்து இம்முறை கிணத்தை வென்று புதிய வரலாறு படைக்கும் என பலத்த எதிர் பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் லண்டன் வெம்பிளி மைதானம் இங்கிலாந்து மற்றும் இத்தாலி ரசிகர்களால் களைகட்டியுள்ளது.
இத்தாலி அணி குரூப் A பிரிவில் இடம் பெற்றிருந்தது. குரூப் ஆட்டங்களில் துருக்கி அணியை 3-0 கோல் கணக்கிலும், சுவிட்சர்லாந்தை 3-0 என்ற கோல் கணக்கிலும் வேல்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றிகண்டு குரூப்பில் முதலிடத்தைப் பிடித்தது.
காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் ஆஸ்திரிய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்றும், அரையிறுதியில் ஸ்பெயின் அணியை பெனால்டி முறையில் 4-2 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளது.
இதுவரை இந்த யூரோ போட்டியில் இத்தாலி அணி 15 கோல்கள் அடித்துள்ளது; அதற்கு எதிராக நான்கு கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணி குரூப் D பிரிவில் இடம் பெற்றது. குரூப் ஆட்டங்களில் க்ரோஷியா அணியை 1-0, செக் குடியரசு அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஸ்காட்லாந்து அணியுடன் கோலடிக்காமல் சமநிலை செய்தது.
காலைறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் ஜெர்மனியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியை வெளியேற்றியது. காலிறுதியில் உக்ரைன் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
அரையிறுதியில் டென்மார்க் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இங்கிலாந்து அணி இதுவரை 8 கோல்கள் போட்டுள்ளது. அந்த அணிக்கு எதிராக 1 கோல் போடப்பட்டுள்ளது.
இரு அணிகளும் மொத்தம் 27 முறை ஒருவரோடு ஒருவர் மோதியுள்ளன.
அவற்றில் 10 போட்டிகளில் இத்தாலி முதலிடத்தைப் பிடித்தது, இங்கிலாந்து 8 வெற்றிகளைப் பெற்றது.
1978இல் நடந்த உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் அஸ்ஸூரிக்கு எதிராக வென்றதில் இருந்து மூன்று சிங்கங்கள் அணியான இங்கிலாந்து இன்னமும் ஒரு போட்டியில்கூட வெல்லவில்லை.