வார இறுதிக்குள் அந்நிய செலாவணி கையிருப்பு 3 பில்லியன் டொலராக அதிகரிக்கும்:மத்திய வங்கி ஆளுநர்
நாட்டில் தற்போது உள்ள 1.5 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி கையிருப்பானது வார இறுதிக்குள் 3 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard cabraal) தெரிவித்துள்ளார்.
வாராந்த ஆங்கில பத்திரிகையிடம் இதனை கூறியுள்ள அவர், பணம் கிடைக்கும் வழியை இந்த சந்தர்ப்பத்தில் வெளியிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
பணம் கிடைத்த பின்னர், அது கிடைத்த வழியை வெளியிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இலங்கை மத்திய வங்கியின் அதிகரிகள் சிலர், வார இறுதியில் ஐக்கிய அரபு ராஜ்ஜியம், சவுதி அரேபியா உட்பட சில மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் கத்தார் நாட்டிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் நிதியை கைமாற்றாக பொறும் வசதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதேவேளை இந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆரம்பமான எரிபொருளுக்கான 500 மில்லியன் டொலர் கடன் மற்றும் 400 மில்லியன் டொலர் கைமாற்று வசதி தொடர்பில் இந்திய அரசுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதுடன் அந்த கடன் மற்றும் கைமாற்று வசதி என்பன எதிர்வரும் ஜனவரி மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.