செம்மணி மனித புதைகுழியில் சிறிய குழந்தைகளின் என்புத்தொகுதிகள் அடையாளம்
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வில் சிறுவர்களுடைய என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம்(7.5.2026) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இன்றுடன் 259 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றுள் 254 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
அகழ்வு பணிகள்
ஏற்கனவே வடமேற்கு பகுதியாக அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சில என்புத் தொகுதிகளின் இருப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தநிலையில், எத்தனை என்பு தொகுதிகள், எந்த விதமான நிலையில் காணப்படுகின்றது, என்பது சுத்தப்படுத்த பின்னரே முழுமையாக தெளிவாகவும் கூற முடியும். அந்த அடிப்படையில் இந்த அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம்பெறும்.

தற்போது அகழ்ந்தெடுக்கப்படும் என்புத் தொகுதிகள் சிறுவர்களுடைய என்புத் தொகுதிகளாக இனம் காணப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக கைக்குழந்தைகளின் என்புத் தொகுதிகள் இன்று 02 அகழ்ந்து எடுக்கப்பட்டன.
மேலும் அடையாளம் காணப்பட்டுள்ளவையும் சிறிய குழந்தைகளின் என்புத்தொகுதிகளாக தென்படுகின்றன.
அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.