புதிய அரசமைப்பு வந்தால் நிபந்தனையற்ற ஆதரவு! முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா அறிவிப்பு
இலங்கையின் அரசமைப்பில் தொடர்ச்சியாகத் திருத்தங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான செயற்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்தால், தான் அரசுக்கு வெளியே இருந்துகொண்டு அதற்கு முழுமையான ஆதரவளிக்கத் தயாராக இருக்கின்றார் என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும், "அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் எதிர்வரும் 22ஆம் திகதி சபாநாயகரால் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
வெளிப்படைத்தன்மை
அதனைத் தொடர்ந்து 24 மற்றும் 25ஆம் திகதிகளில் விவாதங்கள் நடைபெறவுள்ளன. எனினும், நீதிமன்றத்தின் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அரசைச் சேர்ந்த சிலர் அது குறித்த கருத்துக்களை வெளியிட்டிருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என நான் கூறாவிட்டாலும், இத்தகைய முற்கூட்டிய கசிவுகள் குறித்து வெளிப்படைத்தன்மை அவசியமானது.
இலங்கைக்கு அவ்வப்போது திருத்தங்களை மேற்கொள்ளும் அரசமைப்புச் சட்டங்கள் தேவையில்லை. நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண புதிய அரசமைப்பு ஒன்றே அவசியமானது. அரசமைப்பு என்பது ஓர் அரசின் அல்லது அரசியல் கட்சியின் தேவைக்காக உருவாக்கப்படக் கூடாது.
நாட்டின் எதிர்காலத்தையும் அனைத்து மக்களினது உரிமைகளையும் கருத்தில்கொண்டே அது தயாரிக்கப்பட வேண்டும். நாட்டுக்குத் தேவையான இந்த அரசமைப்பு மாற்றத்தைக் கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி முன்னெடுக்க வேண்டும்.
புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கும் பட்சத்தில், நான் அரசுக்கு வெளியே இருந்தாலும் அதற்கு எவ்வித தயக்கமுமின்றி ஆதரவளிக்கத் தயாராக இருக்கின்றேன்." என்றார்.
2 நாட்களாகியும் இலங்கை திரும்பாத ஷிரந்தி ராஜபக்ச..! சிங்கப்பூர் சென்ற பெண் நாடு திரும்பியதால் பரபரப்பு