முன்னாள் போராளியின் உணவு தவிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முன்னாள் போராளியொருவர் நடத்திய நீதி கிடைக்கும் வரை சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 14ஆம் திகதி காலை 7 மணிக்கு, அழகரெத்தினம் வனகுலராசா என்ற ஒரு காலினை இழந்த முன்னாள் போராளி ஒருவர் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் நீர் மற்றும் உணவு இல்லாமல், நீதிகிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, நீதிகிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
தற்காலிகமாக இடைநிறுத்தம்
இலங்கை மற்றும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆரம்பித்த இந்த போராட்டத்தை இன்று மக்கள், வடகிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.
உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கான தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் தன்னுடன் இணைந்து பொதுமக்களும் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் கடிதம் மூலம் எழுதி தெரிவித்ததனையடுத்தே குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த நபரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதனால் நோயாளர்காவு வண்டி மூலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கோரிக்கைகள்
குறித்த போராட்டத்திற்கான கோரிக்கைகளாவன,
தமிழர்களுக்கு தனி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும். மாவீரர் துயிலும் இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
தமிழினத் துரோகிகள் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும்,உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், பிரதேசவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இல்லாதவர்கள் இருந்ததாக கூறி, வெளிநாடு மற்றும் உள்நாட்டில் சகபோராளிகளை காரணம் காட்டி பணம் வசூலித்து, போராளிகளை ஏமாற்றி, சுற்றுலா விடுதி, தோட்டம். பண்ணை அமைத்து, வேலை செய்யும் பணியாளர்களுக்கு சரியான சம்பளம் வழங்காமல் இருப்பதை நிறுத்தி, அவர்களுக்கு ஒருமணிநேரத்திற்கு 200 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
முதியோர் மற்றும் இளையோர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், காணி மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு காணி, வீடு வழங்கப்பட வேண்டும்.
இலங்கையில் பிச்சை எடுப்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதால், பிச்சை எடுப்பவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும்.
என 10 கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




