பிரதமர் தலைமையில் புரோட்லண்ட் நீர் மின் திட்டத்தின் பிரதான சுரங்கப்பாதைக்கு நீர் நிரப்பும் நிகழ்வு (Video)
லக்ஷபான வளாகத்தின் இறுதி நீர் மின் உற்பத்தி நிலையமான புரோட்லண்ட் நீர் மின் திட்டத்தின் பிரதான சுரங்கப்பாதைக்கு நீர் நிரப்பும் ஆரம்ப நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று கொழும்பு அலரி மாளிகையில் இணையவழி ஊடாக இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா ஒயாவின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்டுள்ள அணைக்கட்டிலிருந்து கிதுல்கல கலுகொஹுதென்னே அமைந்துள்ள மின் நிலையம் வரை 3.5 கிலோமீற்றர் நீளத்திற்கு இந்த சுரங்கப்பாதை ஊடாக நீர் கொண்டு செல்லப்பட்டு தேசிய மின் கட்டமைப்பில் வருடாந்தம் இணைக்கப்படும் மின் உற்பத்தியானது கிகாவொட் 126 மணித்தியாலங்களாகும்.
இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டு செலவானது 97 மில்லியன் அமெரிக்க டொலராகும்.
இத் திட்டத்திற்கு சீன தொழிற்துறை மற்றும் வணிக வங்கி மற்றும் ஹட்டன் நஷனல் வங்கி ஆகியன நிதி பங்களிப்பு வழங்கியுள்ளன.
குறித்த நிகழ்வில் மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே (Gamini Lokuge), நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம்.அலி சப்ரி (Ali Sabri), இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake),
பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman), இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் எம்.ஆர்.ரணதுங்க (M.R.Ranatunga), பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் நொயெல் பிரியந்த, திட்ட பணிப்பாளர் எச்.எம்.விஜேகோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






