இலங்கை தமிழ் அகதிகளை மீளக் கொண்டு வருவதாக கனடாவிலுள்ள அமைப்புகள் பணம் வசூலிப்பு..! ஈரோஸ் தலைவர் அதிருப்தி
இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழ் மக்களை மீள இலங்கைக்கு கொண்டு வருவதாக கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஜ.எம்.எஸ் என்ற அமைப்பு அதற்கான திட்டம் இல்லாது இரு நாட்டு அரசுகளுடன் பேசாது மக்களிடம் பணம் வசூலித்து வருகின்றதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த அமைப்புகள் பணம் வசூலிப்பதை உடன் நிறுத்த வேண்டும் என்றும், வசூலித்த பணம் எவ்வளவு என உடன் அறிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (24.10.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பணம் வசூலிப்பது தொடர்பான சர்ச்சை
மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழ் மக்களை மீள இலங்கைக்கு கொண்டு வருவதாக கனடாவில் கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஜ.எம்.எஸ் என்ற அமைப்பு பணம் வசூலித்து வருவது தொடர்பாக சில சர்ச்சைகள் இடம்பெற்று வருகின்றது.
இது தொடர்பாக இந்தியா, திருச்சி மற்றும் புலால் முகாம்களில் உள்ள மக்கள் தாங்கள் தாய் நாட்டுக்கு வரப்போகின்றோம். அதற்கான ஆயத்தங்கள் செய்து தருமாறு என்னுடன் தொடர்பு கொண்டு கோரியுள்ளனர்.
இதற்கமைய எதிர்வரும் மாதம் இந்தியாவுக்கு குழு ஒன்றுடன் செல்லவுள்ளேன். அப்போது அனைத்து முகாம்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளேன். இந்த நிலையில் கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஜ.எம்.எஸ் என்ற அமைப்பும் பாதயாத்திரையாக சென்று பணம் வசூலிக்கின்றனர்.
இது கனடாவில் மாத்திரம் அல்ல பல ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறு பணம் வசூலித்து வருகின்றனர். இந்த அமைப்புகள் பணம் வசூலிப்பதை பாராட்டுகின்றோம். இந்தியாவில் அகதிகளாக இருக்கும் மக்களை மீளக் குடியமர்த்துவது நல்ல விஷயம்.

பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என கேள்வி
ஆனால் அதற்கான திட்டமிடல் இருக்கிறது. அந்த திட்டத்தை வெளிப்படுத்தியதா? இலங்கை அரசுடன் அல்லது இந்திய அரசுடன் பேசினார்களா? யார் உத்தரவாதம் தந்தார்கள்? இவைகள் எதுவும் இல்லாமல் எப்படி பணம் வசூலிப்பார்கள்.
கடந்த காலத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் போராட்டத்தை ஆதரித்து கஷ்டப்பட்டு உழைத்து கொடுத்து இன்று கடனாளியாக எத்தனையோ பேர் கடன் கட்ட முடியாது இரண்டு அல்லது மூன்று தொழில்களை செய்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் முதலாவது அந்த மக்கள் வர விரும்ப வேண்டும்.
அவர்களை கொண்டு வந்தால் அவர்களுக்கான காணி, வீடுகள், வாழ்வாதாரம், இருப்பிடத்தை உறுதிப்படுத்த வேண்டும், அந்த புலம்பெயர்ந்த மக்களை மீளக் கொண்டு வந்து குடியேற்றுவதற்கான சட்டதிட்டம் நிறைய இருக்கிறது. இவ்வாறு பல பிரச்சினை இருக்கிறது . இவ்வாறான நிலையில் இரண்டு நாட்டு அரசாங்கங்களுடன் கலந்துரையாடாமல் எவ்வாறு பணம் வசூலிப்பீர்கள்.
எனவே பணம் வசூலிப்பதை உடன் நிறுத்த வேண்டும் என்பதுடன் கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மாத்திரம் அல்ல ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும். இந்த அகதிகளை மீளக் குடியேற்றுவது தொடர்பில் நாங்கள் புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் உட்பட ஒரு குழுவை ஏற்படுத்தி ஆலோசனைகளை பெற்று முன்னெடுத்துக் கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.