சிறையில் இருந்த அமைச்சருக்கு பிரியாணி அனுப்பிய மைத்திரி - ரணில் அரசாங்கம்
தற்போதைய அரசாங்கத்தில் சிறிய குறைபாடுகளைக் கண்டவுடன் மீண்டும் பழைய அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படக்கூடாது என முன்னாள் இராணுவத் தளபதியும் ஃபீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.
மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர், "எமது நாட்டில் நீண்டகாலமாக நிலவிய ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரம் நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கையையும் சீரழித்தது.
அரச வளங்களையும் நாட்டின் பணத்தையும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளையும் ஊழல் அரசியல்வாதிகள் கொள்ளையடித்தனர்.
ஊழல்வாதிகள்
இதன்மூலம் ஒரு சிலர் செல்வந்தர்களாகவும் ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களாகவும் மாறியபோதிலும், பெரும்பான்மையான மக்கள் வறுமையிலும் பொருளாதார நெருக்கடியிலும் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.

வறிய மக்களுக்கு சிறிய உதவிகளை வழங்கி அவர்களது வாக்குகளைப் பெற்றுக்கொள்வதே ஊழல் அரசியல்வாதிகளின் அரசியல் கலாசாரமாக இருந்தது. தகரத் தகடுகள், தலையணைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டனர். ஆனால், இவ்வாறான உதவிகள் மக்களின் வாழ்க்கையில் நிரந்தரமான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
நானும் ஒரு காலத்தில் இந்த அரசியல் முறைக்குள் இருந்தேன். ஆனால், அங்கு நிலவிய ஊழல் நிறைந்த கலாசாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் அதிலிருந்து விலகினேன்.
இப்போது அந்த அரசியல் கலாசாரத்தை நிராகரிக்கும் சக்தியொன்று ஆட்சிக்கு வந்துள்ளது. இதனை நாம் சாதகமான மாற்றமாகக் கருத வேண்டும்.
பிரியாணியும் ப்ரைட் ரைசும்
நான் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இடம்பெற்ற சம்பவமொன்றை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அப்போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் விளக்கமறியலில் இருந்து வெளியேறி நாடாளுமன்றத்துக்கு வந்தார்.

ஒரு நாள் நாடாளுமன்றத்தில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும், எனக்கு முன்னால் அமர்ந்திருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அந்த அமைச்சர்களில் ஒருவர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவைப் பார்த்து, 'நீங்கள் இவ்வாறு எங்களைக் கத்தித் திட்டினாலும், நான் உங்களுக்கு பிரியாணியும் ப்ரைட் ரைசும் சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தேனே என்று கூறினார்.
இந்தச் சம்பவம், அரசியலில் எதிரெதிர் தரப்புகளில் இருப்பவர்கள் எனக் காட்டிக்கொண்டாலும், அவர்களுக்கிடையில் தனிப்பட்ட தொடர்புகளும் பரஸ்பர உதவிகளும் எவ்வாறு காணப்பட்டன என்பதை வெளிப்படுத்துகின்றது.
எனவே, கடந்த கால ஊழல் அரசியலின் விளைவுகளை மக்கள் மறந்துவிடக்கூடாது. தற்போதைய அரசாங்கத்தில் சிறிய குறைபாடுகள் தென்படுவதற்காக நாட்டை அழித்த பழைய அரசியல்வாதிகளிடம் மீண்டும் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் எனச் சிந்திக்கக்கூடாது” என எச்சரித்தார்.