பலாலி விமான நிலையத்தில் விசேட காட்சிக்கூடமொன்றை நிறுவுவதற்கு தீர்மானம்
பலாலி விமான நிலையத்தில் விசேட காட்சிக்கூடமொன்றை நிறுவுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் கிராமப்புறங்களிலுள்ள இளையோரிடத்திலும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த கல்விகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பரந்தளவிலான செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கும், இத்துறை மீதான ஈர்ப்பை இளையோரிடத்தில் தூண்டும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்துப் பிரதி அமைச்சர் பொறியியலாளர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோரின் தலைமையில், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தொடர்பில் வடக்கு மாகாண இளையோருக்கு விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டத்தை மீள ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (19.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண இளையோரிடத்தில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமைக்காக அரசாங்கத்துக்கும் அமைச்சருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
விழிப்புணர்வூட்டல்
வடக்குக்கு இது மிகவும் அவசியமானதொரு செயற்றிட்டம் எனச் சுட்டிக்காட்டிய அவர், இத்துறை சார்ந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் இளையோருக்குப் பரந்துபட்ட விழிப்புணர்வை வழங்குவதற்கு மாகாண நிர்வாகத்தின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும், பலாலி விமான நிலைய விரிவாக்கம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி என்பன வடக்கு மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடக்கவுரையாற்றிய அமைச்சர் அநுர கருணாதிலக, வடக்கு மாகாண இளையோருக்கான இந்த விழிப்புணர்வூட்டல் செயற்றிட்டத்தை மீள ஆரம்பிப்பது மிக முக்கியமானதொரு தருணம் எனக் குறிப்பிட்டார்.

இத்துறை தொடர்பான தெளிவு இளையோரிடத்தில் குறைவாக உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் இலங்கைக்குத் தனித்துவமான இடமிருப்பதாகவும், இதனுடான வேலைவாய்ப்புக்கள் தாராளமாகக் காணப்படுவதாகவும் தெரிவித்தார். வடக்கின் மூலைமுடுக்குகளிலெல்லாம் இத்தகவல் இளையோரைக் சென்றடைய வேண்டும் எனவும், பாரம்பரிய வேலைவாய்ப்புக்களைத் தாண்டி இத்துறை சார்ந்த வாய்ப்புக்கள் தொடர்பில் அறிவூட்டப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், ஆளுநர் குறிப்பிட்டதைப்போன்று பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், இந்திய அரசாங்கத்தின் 63.5 மில்லியன் டொலர் நிதியுதவியில் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதிக கேள்வி
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் பொறியியலாளர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு, நடைமுறையிலுள்ள கல்வி முறைமைக்கும் இவ்வாறான தொழில் வாய்ப்புக்களுக்கும் இடையிலான இடைவெளி எதிர்காலத்தில் குறைக்கப்பட வேண்டும் எனவும், இன்னும் 10 ஆண்டுகளில் இத்துறைக்குத் தற்போதுள்ள கேள்வியை விட மூன்று மடங்கு அதிக கேள்வி உருவாகும் எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ்.மங்கள தனது உரையில், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த கல்வி என்பது கொழும்புடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றெனவும், அது பொருளாதார வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே உரித்தானது எனவும் சமூகத்தில் நிலவும் சிந்தனையை மாற்றியமைத்து, அனைத்துத் தரப்பினரும் இத்துறைக்குள் நுழைவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இவ்விழிப்புணர்வுச் செயற்றிட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல உரையாற்றுகையில், அரசாங்கத்தின் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாகவே இச்செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் விமான சேவைகளுக்கான முனையம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்ற தகவலையும் அவர் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற திறந்த கலந்துரையாடலின்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர்இ.செந்தில்மாறன், தமது பாடசாலையில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறைசார் கழகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டினார்.
இத்துறையில் கல்வி கற்பதன் ஊடாக எத்தகைய வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறித்தும், இக்கல்வியை எங்கு, எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் மற்றும் அதற்கான தகைமைகள் யாவை என்பது குறித்தும் மாணவர்களிடையே தெளிவற்ற நிலை காணப்படுவதால், விரிவான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் அவசியம் என வலியுறுத்தினார். இத்தகைய கல்விச் செயற்பாடுகளில் வடபகுதி இளையோரும் தடையின்றிப் பங்கேற்பதற்கு ஏதுவாக, வடக்கிலேயே இக்கல்வி நெறிகளை ஆரம்பிப்பது சிறப்பானதாக அமையும் எனவும் அவர் ஆலோசனை வழங்கினார்.

சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுனில் ஜயரத்ன கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் புலம்பெயர் தமிழர்களின் முதலீட்டுடன் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தொடர்பான கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய கல்லூரியொன்றை நிறுவுவது தொடர்பில் ஆளுநர் முயற்சிகளை மேற்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்திலுள்ள பெற்றோர்களிடம் போர்க்கால நினைவுகள் இன்னமும் ஆழமாகப் பதிந்துள்ளமையால், இத்துறையில் இளையோரை உள்ளீர்ப்பதற்கு அவர்கள் மத்தியில் ஆர்வத்தையும் நம்பிக்கையையும் தூண்டும் வகையிலான நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.
அத்துடன், பலாலி விமான நிலையத்தைச் சிவில் மயப்படுத்துவதன் ஊடாக, அதனை இளையோர் இலகுவாகப் பார்வையிடுவதற்கான வசதிகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இக்கலந்துரையாடலின் முடிவில், வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஊடாகப் பாடசாலை மாணவர்களுக்கு இக்கல்வி தொடர்பான விழிப்புணர்வூட்டல்களை மேற்கொள்வதற்கும், பலாலி விமான நிலையத்தில் இத்துறை மீதான ஈர்ப்பை உருவாக்கும் வகையிலான காட்சிக்கூடத்தை நிறுவுவதற்கும், ஏனைய விழிப்புணர்வுச் செயற்பாடுகளைப் படிப்படியாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்விசேட கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடப் பிரதிநிதி, தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை, யாழ்ப்பாண உயர் தொழில்நுட்ப நிறுவனம், தொழிற்பயிற்சி அதிகார சபை மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியவற்றின் மாவட்ட முகாமையாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri