ஈழத்தமிழர்கள் முன்னுதாரணமாக கொள்ள வேண்டியது இஸ்ரேலையா - பாலஸ்தீனையா!
ஈழத்தமிழரின் உள்ளக அரசியல் அறிவைப் போன்றே அவர்களது உலக அரசியல் அறிவும் வியாபகத் தன்மை குறைந்ததாகவே இருக்கின்றது.
உள்ளக அரசியல் மாற்றங்களைக் கொண்டு ஈழத்தமிழர்கள் தங்களுக்குச் சாதகமான அரசியல் களங்களை இலங்கையின் உள்ளக அரசியல் தளத்தில் அமைத்து அரசியல் ரீதியான வெற்றியொன்றை இதுவரை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
அது போலவே உலக அரசியல் தளத்திலும் ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்த அரசியல் வெற்றியொன்றினை பெற்றுக்கொள்ள இதுவரை முடியவில்லை.
பல தடவை முயன்ற போதும் கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்பது போலவே ஒவ்வொரு வெற்றி வாய்ப்புக்களும் ஈழத்தமிழர்களிடம் இருந்து பறிபோயின.
பலம் வாய்ந்த நிலையில் இருந்து கொண்டு பேரம் பேசும் சூழலுக்கும் பலவீனமாக சூழலில் இருந்து கொண்டு பேரம் பேசும் சூழலுக்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன.
இஸ்ரேலின் சாதுரியம்
இந்நிலையில், பலமான எந்தவொன்றும் வாழ்தலுக்கான தகமையை பெற்றுக்கொள்ளும் என்பதை தக்கன பிழைத்தல் என்று அறிவியல் சொல்லும். இந்த விதிக்கு கட்டுப்பட்டு இயற்கையின் உயிரற்றதாகவோ அல்லது உயிருள்ளதாகவோ இருக்கலாம்.
இன்றைய உலக ஒழுங்கில் அரசியல் தளத்திலும் சரி இராணுவ மற்றும் பொருளாதார, அறிவியல் என பல தளங்களிலும் வலுவான தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகவே இஸ்ரேல் தன்னை தக்க வைத்துள்ளது.
ஆனாலும், அதற்கு நேர் எதிர்மாறான ஒரு களச்சூழலையே பாலஸ்தீனும் அதன் விடுதலைக்காக போராடிவரும் விடுதலை அமைப்புக்களும் கொண்டுள்ளன.
இந்த நிலையில் இருந்துகொண்டு இஸ்ரேலை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்தால் தனக்கான தேசத்தினை அக புறச் சூழல்களை சாதுரியமாக கையாண்டதன் மூலம் அமைத்துக் கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தினைக் கொண்ட நாடாக இஸ்ரேல் இருக்கிறது என்று சொல்லலாம்.
ஈழத் தமிழரும் தமக்கான தாயகம் ஒன்றுக்காக போராடி வரும் இன்றைய களச்சூழலில் அவர்களுக்கு அவர்களின் அக, புற களச்சூழல்களை சாதுரியமாக பயன்படுத்திக் கொள்வதற்கு சிறந்த முன்னுதாரணமாக இஸ்ரேலைத் தவிர வேறொரு நல்ல உதாரணம் இருந்து விடப் போவதில்லை.
நீண்ட பெருந்துயரிலிருந்து மீளல்
நீண்ட பெருந்துயரை சுமந்து நீண்ட காலம் நாடற்றவர்களாக யூதர்கள் வாழும் போது அவர்களை இந்த உலகம் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இன்று அந்த யூதர்களைக் கண்டு உலகம் அஞ்சும் நிலை இருக்கின்றது என்பதை யாரும் மறுத்து விட முடியாது.
ஹிட்லரினால் யூதர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது யூதர்களுக்காக குரல் கொடுத்து ஹிட்லரை எதிர்த்து நின்று அவர்களுக்கு பாதுக்காப்பினை வழங்கி விட யாரும் முன்வரவில்லை. அப்படி முன் வரக்கூடிய சூழலிலும் அன்று யாரும் இல்லை என்றும் சொல்லலாம்.
60 இலட்சம் யூதர்கள் அழிக்கப்படும் போது யூதர்கள் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் தான் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ள வேண்டும். தங்களுக்காக தாங்களே போராட வேண்டும் என்பதாகத் தான் இருக்க வேண்டும். அப்படித்தான் இருந்திருக்கிறது என்பதை வரலாறு சொல்லி நிற்கின்றது.
தங்களுக்கென ஒரு தாயகத்தினை யூதர்கள் அமைத்துக்கொள்ள முற்பட்ட வேளையில் அதனை காத்துக்கொள்வதற்கான முன்னாயத்தங்களையும் அவர்கள் சமநேரத்தில் செவ்வனவே செய்திருந்தனர்.
இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவானதை அதனைச் சூழவுள்ள முஸ்லிம் தேசங்கள் அதன் மீதான வலிந்த போர் ஒன்றின் மூலம் அதனை அழித்துவிடும் எண்ணத்தோடு வரவேற்றுக் கொண்டன. இன்றளவும் இஸ்ரேலை அழித்து விடத் துடித்த எந்தவொரு முஸ்லிம் நாடும் இஸ்ரேல் அளவுக்கு தன்னிறைவு பெற்று வளர்ந்து விடவில்லை என்பதும் நோக்கத்தக்கது.
யூதர்கள் இஸ்ரேல் என்ற நாட்டினை உருவாக்கிக் கொள்வதற்காக எதிர் கொண்ட சவால்கள் மற்றும் வழிமுறைகள் தொடர்பாக ஓரளவுக்கேனும் தமிழர்கள் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக தமிழ் அரசியல் தலைமைகள் அறிந்திருக்க வேண்டும்.
அது போல் களச்சூழலுக்கு பொருத்தமான வழி முறைகளை 2009 இற்குப் பின்னர் அவர்கள் உருவாக்கியிருக்க வேண்டும்.எனினும் அத்தகைய முயற்சிகளில் தாயக அரசியல் தலைமைகள் எந்த முன்னெடுப்புக்களையும் செய்யவில்லை.
பாராளுமன்றத்தில் எடுத்துரைப்பது, ஆர்ப்பாட்டங்களை செய்வது, சர்வதேசத்திற்கு முறையிடுவது என்ற அணுகலே அவர்களுடையதாக இருக்கின்றது.
இவ்வணுகலைத் தான் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து இன்றளவும் தமிழ்த் தலைமைகள் பின்பற்றி வருகின்றனர்.
ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள்
இத்தகைய அணுகுமுறைகளின் மூலம் உருப்படியான தீர்வுகள் எவற்றையும் பெற முடியாது என்ற முடிவுக்கு வந்த பின்னரே ஈழத்தமிழரின் போராட்டம் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் இருந்து தனிநாட்டுக் கோரிக்கையோடு ஆயுதப் போராட்டமாக மாற்றம் பெற்றிருந்தது.
அப்போதும் கூட ஈழத்தமிழ் இளைஞர்களின் முயற்சிகளோடு சேர்த்தோடி ஈழத்தமிழினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வுகளைப் பெற்று விடுவதில் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் ஆர்வம் காட்டாது இருந்தனர் என்பது கடந்த கால நிகழ்வுகளுக் கூடாக அறிந்து கொள்ள முடியும்.
ஆயினும், இப்போது ஆயுதப் போராட்டம் இல்லை. அகிம்சைப் போராட்ட அணுகுமுறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்று விடுவதில் முனைப்புக்காட்டி வரும் ஒரு சமூகமாக ஈழத்தமிழர் இருக்கின்ற போதும் அவர்களது அரசியல் தலைமைகள் சரியான வழிமுறைகளில் சிந்தித்து செயலாற்றுவதன் மூலம் நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுவிடுவதில் பற்றுறுதியுடன் செயலாற்றவில்லை என்ற குற்றச்சாட்டினை முன் வைப்பதில் தவறேதும் இருந்து விடப் போவதில்லை.
உலகளவிலான சிறிய முன்னேற்றம்
உலகளவில் ஏற்பட்ட சிறிய முன்னேற்றமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அதன் செயற்பாடுகளும் அமைந்துள்ள போதும் அது ஈழத்தமிழர்களுக்கான தனிநாடு நோக்கிய தன் பாய்ச்சலை மெதுவாகவே செய்து கொள்கின்றதாகவே உலக அரங்கில் கிடைக்கும் விளைவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
அதாவது அரசியல் ரீதியாக உலக நாடுகளிடையே ஈழத்தமிழர் நலன் சார்ந்து வலுவான மாற்றங்களை ஏற்படுத்தவல்ல செயற்பாடுகளை அந்நாடுகளின் அக புற அரசியல் சூழல்களுக்கு ஏற்ப நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை என்பதை உணர்ந்தாக வேண்டும்.
குறிப்பாக பல உலக நாடுகளாலும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்குவதற்கான முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமோ அல்லது ஈழத்தமிழர் சார்ந்து இயங்கும் சமூக அமைப்புக்களோ வெற்றியை ஈட்டிக் கொள்ள முடியவில்லை. அவர்களது எல்லா முயற்சிகளும் இது தொடர்பில் தோல்வியிலேயே முடிவுற்றுள்ளன.
இந்திய மத்திய அரசாங்கம் அண்மையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மீண்டும் நீடித்திருப்பதையும் அதனிடமிருந்து தடையை நீக்குவதற்கு இதுவரை ஈழத்தமிழ் அமைப்புக்களால் முடியாது இருப்பதும் சுட்டிக்காட்டத்தக்க விடயங்களாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டு விட்டது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள போதும் அதன் தலைவர் மற்றும் முதன்மைத் தளபதிகள் உள்ளிட்ட இயங்கு - இயக்குநிலை உறுப்பினர்கள் இல்லாதொழிக்கப்பட்டு விட்டனர் என்று சொல்லப்பட்ட பின்னரும் 15 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீடிக்க முடிகின்றது என்றால் களச்சூழலை உரிய முறையில் பயன்படுத்தினால் தடையை நீக்கிக் கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான உலக நாடுகளால் விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டால் மீண்டு தடை விதிக்கப்படாத சூழல் பேணப்பட்டால் ஈழத்தமிழர்களின் தனிநாட்டுக்கான போராட்டம் புதிய பரிமாணத்தோடு வீரியம் பெறும் என்பதில் ஐயமில்லை.
வென்றவர்களின் வழிமுறைகள்
இந்த நிலையில் இஸ்ரேலின் தனிநாட்டுக்கான இயங்குநிலையில் அது அடைந்திருந்த வெற்றி என்பது முன் உதாரணமானதேயன்றி பாதகமானதாக இருந்து விடப்போவதில்லை.
இஸ்ரேல் அக புறச் சூழல்களை சாதூரியமாக கையாண்டு தனக்கான தனிநாடு நோக்கிய நகர்ந்திருந்தது. ஈற்றில் வெற்றியோடு இன்றளவும் நிலைத்திருக்கிறது.
அதற்காக யூதர்கள் தாங்களாகவே மேற்கொண்டிருந்த சில முக்கியமான விடயங்களாக பின்வருவனவற்றைச் சுட்டிக் காட்டலாம்.
- மொசாட்டுக்கான அடித்தளத்தினை இட்டது
- நில வங்கியை அமைத்தது
- நிழல் அரசை உருவாக்கியது
- இராணுவ கட்டமைப்பை உருவாக்கியது
இவற்றில் இன்று ஈழத்தமிழர்களிடம் இருப்பது நிழல் அரசாங்கமாக தொழிற்படக் கூடிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மட்டுமே. அதுகூட இயங்கு நிலையில் பாலஸ்தீனின் ஐநாவில் பார்வையாளர் அந்தஸ்தினைக் கொண்ட கட்டமைப்புக்கு நிகரானதாகவே இருப்பதாக உணர முடிகின்றது. அதன் செயற்பாடுகள் கூட எதிர்காலத்தை ஐநாவில் பார்வையாளர் அந்தஸ்தினைக் கோரியதாக அமைந்துவிடும் வாய்ப்புக்களும் இல்லாமலில்லை.
அப்படி ஐநாவில் பார்வையாளர் அந்தஸ்தினைக் கொண்ட அமைப்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைந்தால் அதன் நகர்வுகள் எப்படி அமையும் என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பாலஸ்தீனின் முன்னிலை விடுதலை தலைவர்களுள் ஒருவராக இருந்த யாசீர் அரபாத்தின் அணுகுமுறையை கொண்டுள்ளதாக எண்ணத் தோன்றுகின்றது.
பாலஸ்தீனின் அணுகலை முன்மாதிரியாக ஈழத்தமிழர்கள் கொண்டு செயற்படுவதானது அவர்களது விடுதலைப் போராட்டத்தினை அவர்களின் அடுத்தடுத்த பல சந்ததிகளுக்கு கடத்திச் சென்று விடும் வழி முறையானதாகவே இருக்கும் என்பதும் இங்கே நோக்கத்தக்கது.
இன்றுள்ள கேள்வி
இன்றைய கள யதார்த்தத்தில் ஒவ்வொரு ஈழத்தமிழர்களும் மீண்டும் ஒரு முறை தங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய கேள்விகளாக இருப்பவை,
- எங்களுக்கு இலங்கையின் வடக்கு - கிழக்கு இணைந்த தனி நாடு வேண்டுமா?
- தனி நாட்டினை தவிர்த்து இலங்கை அரசின் கீழ் சேர்ந்து வாழ்வதா?
தனி நாட்டுக் கொள்கையை தங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்று ஏற்றுக்கொண்டால் அதற்கான செயற்பாடுகளில் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்.
எங்களின் பாய்ச்சல் வேகம் என்ன? இதனை இன்னும் எப்படி விரைவாக்கலாம் என்று சிந்திக்க தலைப்பட்டு புதிய புதிய வழிமுறைகளை கையாள முயற்சிக்க வேண்டும்.
அப்படி ஒருவேளை தனிநாட்டுக் கொள்கையை அவர்கள் கைவிடுவதாக இருந்தால் இன்று தாயகத்திலும் உலகப் பரப்பிலும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போராட்டங்கள் எல்லாம் வீண் முயற்சிகளாகிப் போய்விடும் என்பதும் சிந்திக்கப்பட வேண்டும். அவை பெறுமதியான உழைப்பின் நேரங்களை வீணடித்து விடும் என்பதும் நோக்கத்தக்கது.
போராட்ட முயற்சிகளை தனி நாட்டுக் கோரிக்கையில் இருந்து மாற்றிக்கொண்டு சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க தேவையான போராட்டங்களை முன்னெடுக்க முயற்சிக்க வேண்டும்.
தனிநாடு தான் தீர்வென வலுவாக நம்பி நடந்தால் அதற்காக ஈழத்தமிழர் கொள்ள வேண்டிய முன்னுதாரணங்கள் வலுவான செயற்திறன் கொண்டு செயற்பட்டு வெற்றியைப் பெற்றவர்களினது முயற்சிகளாக மட்டும் இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |