ஓட்டமாவடியில் இடிக்கப்பட்ட இந்து ஆலயத்தை மீளக் கட்டித்தர வேண்டும்..! ஹிஸ்புல்லாவுக்கு ஈரோஸ் கட்சி வலியுறுத்தல்
மட்டக்களப்பு - ஓட்டமாவடியில் அழிக்கப்பட்டு அபகரிக்கப்பட்ட நிலத்தில், பள்ளிவாசல் மற்றும் மீன் சந்தை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான உரிய காணிகளை திரும்ப தருமாறும், இந்து ஆலயமொன்றை அமைத்து தருமாறும் ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று(04.11.2026) இடம்பெற்ற மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா மௌனம் காத்து வருவதை விட்டுவிட்டு ஓட்டமாவடியில் அழிக்கப்பட்டு ஆக்கிரமித்து, அதில் மீன் சந்தை கட்டிய தமிழ் மக்களின் பாரம்பரிய சொத்தான இந்து ஆலயத்திற்கு உரிய காணியை உடனடியாக தந்து கோயிலை கட்டித்தர வேண்டும்.
இந்து ஆலயத்தை உடன் கட்டித்தரவும்..
இந்த காணி தனியார் சொத்து என நீங்கள் எழுதி, நீங்கள் வைத்துக் கொண்டுள்ள கடிதங்கள் என்னிடம் உள்ளது, இருந்தபோதும் இது தமிழ் மக்களின் பாரம்பரிய நிலம், இந்த காணி இன்று ஓட்டுமாவடி தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் மத்தியில் இருக்கின்றதுடன், அதில் பள்ளிவாசல் மற்றும் மீன் சந்தை கட்டியுள்ளதால் இஸ்லாமிய மக்கள் மத்தியில் ஒரு இந்து ஆலயத்தை கட்டி தருமளவுக்கு தமிழ் மக்கள் பண்பு கெட்டவர்கள் இல்லை.
ஆகவே நாங்கள் கேட்டுக் கொள்வது வாழைச்சேனை ஓட்டுமாவடிக்கு செல்லும் பிரதான பாதையில் ஒரு காணியை பெற்று தந்து, அந்த கோயிலை உடன் கட்டித்தர வேண்டும்.

இதற்கு ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா பதில் சொல்ல வேண்டும், அதேவேளை தமிழ் மக்களின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை ஏமாற்ற ஈரோஸ் விடாது.
ஈரோஸ் கட்சி வலியுறுத்தல்
தமிழ் மக்களுக்கு பிரச்சனை நடந்து கொண்டிருக்கின்ற சமயத்தில் ஈரோஸ் நிற்கும், ஆகவே ஹிஸ்புல்லா காலம் தாழ்த்தாது ஒரு குழுவை ஏற்படுத்துங்கள், நாங்களும் ஒரு குழுவை ஏற்படுத்தி இரண்டு பக்கமும் பேசி அந்த அபகரிக்கப்பட்ட கோயில் காணியை எந்த இடத்தில் பெற்றுத்தரலாம்.
கோயில் கட்டித் தரலாம் என பள்ளிவாசல் தலைவர்கள் ஹிஸ்புல்லா உட்பட பள்ளிவாசல் சம்மேளன தலைவர்கள் கலந்தாலோசித்து முடிவுக்கு வரவும், இதில் நீங்கள் கவனம் செலுத்தாமல் இருந்தால், அடுத்த வருடம் 2027 ஜனவரி மாதம் 14ஆம் திகதிக்கு பின்னர் இந்த அபகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வோம் எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றது.
அதேவேளை கல்முனையைச் சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் முஸ்லிம் என தமிழ் மக்களையும் இஸ்லாமிய மக்களை கூறு போடுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தனியான ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும்! இராதாகிருஷ்ணன் எம்.பி. வலியுறுத்தல்