தனி நபர் ஒருவரை அச்சுறுத்தி பொலிஸார் செய்த மோசமான செயல்
நபர் ஒருவரிடமிருந்து 6,500 ரூபா பணத்தை பறித்தெடுத்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று (11.08.2023) அதிகாலையில் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர், சம்பவ தினமான கடந்த 09.08.2023 அன்று இரவு மட்டக்களப்பிலுள்ள உணவகத்தில் தனது கடமையை முடித்து கொண்டு, இரவு 11 மணியளவில் ஏறாவூர் மிச் நகரிலுள்ள வீட்டிற்கு மோட்டர் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அச்சுறுத்தல்
இதன்போது, அந்த பகுதியில் இரவு நேர வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு பொலிஸ் சாஜன் உட்பட 3 பொலிஸார் குறித்த நபரை நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர்.
மிச் நகரிலுள்ள குறித்த நபருக்கு அடையாள அட்டை இல்லாததையடுத்து, அவரை தமது ஜீப் வண்டியில் ஏற்றி அந்த பகுதி வீதிகளில் சுற்றி திரிந்து 25 ஆயிரம் ரூபா பணம் தந்தால் விடுவதாகவும் அல்லது கைது செய்து சிறையில் அடைப்பதாகவும் அச்சுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், அவர் தன்னிடம் பணம் இல்லை என்றும் 6,500 ரூபா மாத்திரம் தான் இருக்கின்றது எனவும் தெரிவித்தபோது அந்த பணத்தை அவரிடமிருந்து பறித்தெடுத்து விட்டு ஜீப் வண்டியில் இருந்து அவரை இறக்கி விட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரியின் கவனத்திற்குச் சென்றதையடுத்து, உடனடியாக அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அவர்களைக் கைது செய்யுமாறு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவிடம் தெரிவிக்கப்பட்டது.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர், 3 பொலிஸாரையும் இன்று அதிகாலை கைது செய்து, மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் குற்ற விசாரணைப் பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்த பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |