அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஈ.பி.டி.பி கட்சி என்றும் துணையாக இருக்கும்:சட்டத்தரணி றெமீடியஸ் (PHOTOS)
பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தூரநோக்கினால் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம்,கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு தற்போதைய மாநகர சபை நிர்வாகத்தினர் அழகிய நுழைவாயிலை அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது என்று யாழ்.மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி றெமீடியஸ் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குஈ.பி.டி.பி கட்சி என்றும் துணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோம்பயன்மணல் இந்து மயானத்தின் நுழைவாயில் திறப்பு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
"யாழ்ப்பாண மாநகரில் ஒரு மின் தகன மேடை உருவாக்கப்பட வேண்டும் என பலதரப்பட்டவர்களின் ஆலோசனைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அயராத முயற்சியால் பலகோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த மின் தகன மேடை உருவாக்கப்பட்டது.
யாழ்.மாநகரின் ஆட்சிப் பொறுப்பு யோகேஸ்வரி பற்குணராஜாவை முதல்வராக கொண்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஆளுகைக்குள் இருந்த காலப்பகுதியான 2009-2013 காலப் பகுதியில் இது அமைக்கப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சி
இந்த மின் தகன் மேடையை அமைப்பதற்காக அன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி எடுத்தபோது அதை விமர்சித்தவர்களும் தடுத்தவர்களும் ஏராளம். ஆனால் இன்று எமது பிரதேசத்தில் இத்தகைய ஒரு மின் தகன மேடை இருக்கின்றதென பலர் மார்தட்டுகின்றனர்.
இதேபோல வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திகள் பலவற்றை அவர் முன்னெடுத்தபோதும் குழப்பங்களை விளைவித்தனர். ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இத்தகையவர்களின் கருத்துக்களையும் குழப்பங்களையும் கண்டுகொள்ளாது அவற்றை முன்னெடுத்து சாதித்துக்காட்டியிருந்தார்.
அதன் பலன்களையே இன்று பலரும் அனுபவித்து வருகின்றனர். அந்தவகையில் இன்று இந்த கோம்பயன்மணல் மயானம் மேலும் அபிவிருத்தி கண்டுள்ளது. அதன் ஒரு பாகமாகவே இந்த மயானத்தின் நுழைவாயில் அமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்படுள்ளது.
நாம் அபிவிருத்திகளை தடுத்தவர்கள் அல்ல. தடுப்பதற்கும் ஒருபோதும் முயற்சிகளையும் மேற்கொண்டதும் கிடையாது. அந்தவகையில் இந்த மாநகரின் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எமது கட்சி என்றும் முன்னின்று உழைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்.மாநகர சபையினதும் வண்ணை கோம்பயன்மணல் இந்து மயான பரிபாலசபையினதும்
மற்றும் நன்கொடையாளர்களின் நிதிப்பங்களிப்புடன் புதுப்பொலிவு பெற்ற
யாழ்.கோம்பயன் மணல் இந்து மயானத்தின் நுழைவாயில், ஆலயக் கட்டடம், இரண்டு
தகனமேடை, காவலாளி அறை என்பன இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



