தமிழ் சட்டத்தரணிகள் பேரவை முயற்சிகள் வெற்றியடைய அறிவுபூர்வ தீர்மானங்கள் அவசியம்! ஈ.பி.டி.பி கட்சி வலியுறுத்தல்
ஈ.பி.டி.பி கட்சி சுட்டிக்காட்டு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் முயற்சியினை வரவேற்றுள்ள ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி, இவ்வாறான முன்னெடுப்புக்கள் வெற்றியளிக்க வேண்டுமாயின் தீர்மானங்கள் அறிவுபூர்வமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
யாழ் ஊடக மையத்தில் இன்று(4.3.2026) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிணையும் தமிழ்க் கட்சிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிதறிக் கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தேசிய மற்றும் சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்துவதற்காக தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளின் சந்திப்பு ஒன்று நடைபெற்றதாக செய்திகள் ஊடகங்களில் வெளியாகி இருக்கின்றன.

தமிழ் மக்கள் சார்ந்த புத்திஜீவிகள் என்ற அடிப்படையிலே, இன்றைய காலச் சூழலின் தேவையுணர்ந்து முன்னெடுக்கப்பட்ட தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் இந்த முயற்சியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வரவேற்கின்றது.
ஆனால் குறித்த முன்னெப்பிற்கான தமிழ் கட்சிகளின் தெரிவு தொடர்பாக அல்லது அதற்கு பயன்படுத்தப்பட்ட அளவுகோல்கள் தொடர்பாக எமது அவதானங்களையும் எதிர்பார்ப்புக்களையும் வெளிப்படுத்த விரும்புகின்றோம்.
உண்மையிலேயே வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகளை வலுப்படுத்துவதே ஏற்பாட்டாளர்களின் நோக்கமாக இருக்குமாயின், வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் அரசியலை முன்னெடுக்கின்ற அனைத்து தமிழ் அரசியல் தரப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அனைவருடைய கருத்துக்களும் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். அதில் ஒரு வெளிப்படைத் தன்மை பேணப்பட்டிருக்க வேண்டும்.
மங்கள முனசிங்க தீர்வு
ஈ.பி.டி.பி. கட்சியை பொறுத்த வரையில், இலங்கை. - இந்திய ஒப்பந்தத்தினை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றோம்.
குறிப்பாக, ஜனாதிபதி பிரேமதாசா காலத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்ட அனைத்து அரசியல் தீர்வு முயற்சிகளிலும், அதாவது மங்கள முனசிங்க தீர்வு முயற்சியில் இருந்து அனைத்து தீர்வு முயற்சிகளிலும் பங்குபற்றி தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலித்த ஒரு தமிழ் தரப்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இருக்கின்றது.
அரசியல் தீர்வு முயற்சி மாத்திரமன்றி, எமது மக்களின் இருப்பை பாதுகாப்பதற்கும், வாழ்வாதாரத்தினை பாதுகாப்பதற்கும் ஆத்மார்த்தமாக செயற்பட்டு கணிசமான வெற்றியும் பெற்றிருக்கின்றோம்.

அதுவே இன்றுவரையில் எமக்கான வாக்கு வங்கியை தக்க வைத்திருக்கின்றது. ஈ.பி.டி பி. மாத்திரமல்ல இவ்வாறான முயற்சிகளில் அனைத்து தமிழ் கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டும்.
வடக்கிலே தமிழ் மக்கள் கூட்டணி, கிழக்கிலே தமிழ் மக்கள் விடுதலை புலிகள் போன்ற கட்சிகளும் இருக்கின்றன. அவற்றிற்கும் கணிசமான வாக்கு பலம் இருக்கின்றது. ஆகவே இவ்வாறான முயற்சிகளின் போது எதிர்காலத்திலானது, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காது, பரந்துபட்டளவில் அறிவுசார்ந்து சிந்தித்து செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஆக ஒரு பொறுப்புள்ள கட்சி என்ற அடிப்படையில் இதனை வலியுறுத்துகின்றோமே தவிர, காழ்ப்புணர்வாக இதனைக் கருதக் கூடாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam