தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஜனாதிபதியின் பொறுப்பு - நாமல் ராஜபக்ச
கிளர்ச்சியாளர்கள் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கு சில அரசியல் கட்சிகள் ஆதரவளித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிளர்ச்சியாளர்கள் நாடாளுமன்றத்தை கைப்பற்ற முற்பட்ட போது அக்கட்சிகளின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் இருந்ததை அனைவரும் பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கிளர்ச்சி மூலம் ஆட்சி அமைக்கக்கூடாது
இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பும் ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும், கிளர்ச்சியாளர்கள் நாடாளுமன்றத்தை தமது புகலிடமாக மாற்றினால் ஜனநாயகம் புதையுண்டுவிடும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஜனாதிபதியின் பொறுப்பாகும். இதன்படி, நாடாளுமன்றம் உட்பட பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் கிளர்ச்சி மூலம் ஆட்சி அமைக்கக்கூடாது, ஜனநாயக முறைப்படி ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், கிளர்ச்சி மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எந்த தரப்பினரும் முயற்சித்தால் அது வெற்றியடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.