பணியாளர்கள் பற்றாக்குறையால் தடுமாறும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தில் போதிய எண்ணிக்கையில் கடமையாற்றும் வானிலை ஆய்வாளர்கள் இல்லை என்று முன்னறிவிப்பு மற்றும் முன் எச்சரிக்கை பிரதிப் பணிப்பாளர் எம்.எம்.பி. மெண்டிஸ் கூறியுள்ளார்.
திணைக்களத்திற்கு குறைந்தது 38 வானிலை ஆய்வாளர்கள் தேவை எனினும் தற்போது 10 பேர் குறைவாக உள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, துல்லியமான வானிலை முன்னறிவிப்பை வழங்க, திணைக்களம் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெரிய அளவிலான தரவுகளை சேகரிக்கவேண்டியுள்ளது.
அடிப்படை வானிலை அவதானிப்புகள்
அத்துடன், பல வானிலை ஆய்வாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள திணைக்களத்திலும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலும் மற்றும் மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திலும் வானிலை நிபுணர் குழுக்கள் செயற்படுகின்றன.
இதில் மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தற்போது வெளிநாட்டு நிறுவனமொன்று கையாளும் நிலையில், அங்கு நிலைகொண்டிருந்த வானிலை ஆய்வாளர்கள் மீண்டும் கொழும்புக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக அடிப்படை வானிலை அவதானிப்புகள் மட்டுமே அங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |