சிரியாவில் உள்ள இந்தியர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்
சிரியாவில் (Syria) உள்ள இந்திய குடிமக்களை விரைவாக நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவு விவகாரத் துறை நேற்று (06) இரவு அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், சிரியாவில் தற்போதிருக்கும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, இந்திய குடிமக்கள் அனைவரும் அடுத்த அறிவிப்பு வரும் வரை சிரியாவுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய தூதரக அதிகாரிகள் உடனான தொடர்பு
தற்போது சிரியாவில் இருக்கும் இந்தியர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுவதோடு +963 993385973 என்ற வட்ஸ்ஆப் எண் மற்றும் hoc.damascus@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் வழங்கியுள்ளது.
Travel advisory for Syria:https://t.co/bOnSP3tS03 pic.twitter.com/zg1AH7n6RB
— Randhir Jaiswal (@MEAIndia) December 6, 2024
சிரியாவிலிருந்து விரைவாக வெளியேற விரும்பும் இந்தியர்களுக்காக விமான சேவை இருப்பதாகவும், சிரியாவிலேயே இருக்க வேண்டிய அவசியம் இருப்பவர்கள் பாதுகாப்பாகவும் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா நாட்டின் மூன்றாவது பெரிய நகரான ஹாம்ஸையும் (Homs) கிளா்ச்சிப் படையினா் நெருங்கியுள்ளதையடுத்து அந்த நகரமும் அவா்களிடம் வீழும் நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து ஆயிரக்கணக்கானோா் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் தொடங்கிய உள்நாட்டுப் போரில் ஜனாதிபதி அல்-அஸாத் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளா்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் செயல்பட்டன.
திடீரென தாக்குதல்
தலைநகா் டமாஸ்கஸ், அலெப்போ, ஹாம்ஸ், ஹாமா ஆகிய முக்கிய நகரங்கள், ஏறத்தாழ அனைத்து மாகாணத் தலைநகரங்கள் உள்ளிட்ட பெரும்பாலான சிரியா பகுதியை அரசுப் படையினா் கைப்பற்றுவதற்கு ரஷ்யா உதவியுள்ளது.
இந்தச் சூழலில், அலெப்போ மாகாணத்தில் ஹெச்டிஎஸ் கிளா்ச்சிப் படையினா் கடந்த வாரம் திடீரென தாக்குதல் நடத்தி அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றினா்.
அவா்களது இந்த அதிரடி தாக்குதலை எதிா்பாா்க்காத இராணுவம் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும் முன்னேறிய கிளா்ச்சிப் படையினா், நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவைக் கைப்பற்றினா்.
இதனைத் தடுக்க ரஷ்யாவும் சிரியாவும் தொடா்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தினாலும் கிளர்ச்சிப்படை, இன்னொரு நகரான ஹமாவை கடந்த வியாழக்கிழமை கைப்பற்றியது.
இந்தச் சூழலில், அரசுப் படையினரை பின்னுக்குத் தள்ளிவிட்டு தொடா்ந்து வேகமாக முன்னேறி வரும் கிளா்ச்சிக் குழுவினா் தற்போது ஹாம்ஸ் நகருக்கு நெருக்கத்தில் வந்துள்ளதால், அந்த நகரும் அவா்களால் கைப்பற்றப்படுமென எதிா்பாா்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |