தொடர்ந்தும் முதலிடத்தில் எலான் மஸ்க்! புதிய உச்சம் தொட்ட அவரின் சொத்துமதிப்பு - முதல் நபர் என்ற சாதனை
600 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துமதிப்பை தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் படைத்துள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் இன்டெஸ்க் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.
உலக பணக்காரர்கள்
உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகின்றார்.
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் தனக்கு 1 ட்ரில்லியன் டொலர் (ரூ.88 லட்சம் கோடி) ஊதியம் வழங்க வேண்டும் என டெஸ்லா நிறுவனத்திடம் அண்மையில் கோரிக்கை வைத்தார். இதற்கு டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

இதை பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் 423.7 மில்லியன் டெஸ்லா பங்குகளாக பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எலான் மஸ்கின் சொத்துமதிப்பு கிடுகிடுவென உயர தொடங்கியது.
இதன்மூலம் 600 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துமதிப்பை தாண்டிய முதல் நபர் என்ற சாதனையை மஸ்க் படைத்துள்ளார். தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 648 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சொத்து மதிப்பு
சமீபத்தில் நடைபெற்ற நிறுவனத்திற்குள் (insider) பங்கு விற்பனை ஒன்றின் போது, SpaceX நிறுவனத்தின் மதிப்பு 800 பில்லியன் டொலராக உயர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த நிறுவனத்தில் எலான் மஸ்க் சுமார் 42% பங்குகளை வைத்திருப்பதால், அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு பெரிதும் உயர்ந்துள்ளது.
அடுத்த ஆண்டு SpaceX நிறுவனம் 1.5 டிரில்லியன் டொலர் மதிப்பீட்டில் IPO (பொது பங்கு வெளியீடு) மேற்கொண்டால், மஸ்க் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு மட்டும் 625 பில்லியன் டொலரை தாண்டக்கூடும்.
இந்த உயர்வில் டெஸ்லா நிறுவனமும் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை டெஸ்லா பங்கு விலை சுமார் 13% உயர்ந்துள்ளது.
மேலும், முன் இருக்கையில் பாதுகாப்பு கண்காணிப்பாளர் (safety monitor) இல்லாமல் ரோபோடாக்ஸிகளை சோதனை செய்து வருவதாக மஸ்க் அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று மட்டும் பங்கு விலை 4% வரை உயர்ந்தது.
இது எதிர்காலத்தில் வணிக ரீதியான பயன்பாட்டிற்கான முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
1 டிரில்லியன் டொலர் மதிப்பு
மஸ்கின் புதிய முயற்சியான xAI நிறுவனம், 230 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் 15 பில்லியன் டொலர் முதலீட்டை திரட்டும் நிலைக்கு நெருங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் அவரது செல்வ வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

எலான் மஸ்கின் செல்வ உயர்வு மிக வேகமாக நடைபெற்றுள்ளது. 2013 ஆம் ஆண்டு, Bloomberg Billionaires Index-இல் அவர் முதன்முறையாக இடம்பெற்றபோது அவரது சொத்து மதிப்பு 4.8 பில்லியன் டொலராக இருந்தது. 2020 ஆம் ஆண்டில் அவர் 100 பில்லியன் டொலர் சொத்து மதிப்பை கடந்தார்.
சமீபத்தில், டெஸ்லா பங்குதாரர்கள் 1 டிரில்லியன் டொலர் மதிப்புடைய ஊதிய (compensation) தொகுப்பை அங்கீகரித்துள்ள நிலையில், உலகின் முதல் டிரில்லியனேர் (trillionaire) ஆக மாறும் பாதையில் எலான் மஸ்க் உள்ளார் என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.