அவசரகால நிலையை நீக்கி அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் படி செயற்படவும் - ஐக்கிய மக்கள் சக்தி
அவசரகால நிலையை நீக்கி அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின்படி செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2021 ஆகஸ்ட் 30 ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானியில், தொற்றுநோய் சூழ்நிலையின் அடிப்படையில் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம், ஜனாதிபதி அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது, தொற்றுநோயால் ஏற்படும் சூழலை விட பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சூழ்நிலைக்கே பொருத்தமானவையாகும்.
எனினும் 2005 ஆம் ஆண்டின் இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டம் குறிப்பாகத் தொற்றுநோய் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட பேரழிவு சூழ்நிலைகளைக் கையாள வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் கோவிட் ஐ உலக தொற்றுநோயாக அறிவித்து, சுமார் 18 மாதங்களுக்குப் பிறகும் கூட, அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் இலங்கையில் பேரிடர் நிலைமை இருப்பதாக ஜனாதிபதி, அறிக்கை ஒன்றைக்கூட வெளியிடவில்லை என்று மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
மாறாக, தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குப் புறம்பாக ஒரு 'ஜனாதிபதி செயலணி’ உருவாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில், வைரஸ் பரவல் 18 மாதங்களை எட்டும் நிலையில், தொற்றுநோயைக் கையாள அரசாங்கம், தொடர்புடைய சட்டங்களைச் செயல்படுத்தத் தவறிவிட்டது.
அத்தியாவசிய சேவைகளின் செயற்பாடு மற்றும் மக்களுக்கு வழங்கப்படும் வழமையான நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அவசரநிலை என்று அறிவித்து, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைத் தொடர்ச்சியாகவும் தவறாகவும் கட்டுப்படுத்துவதன் மூலம் சர்வாதிகாரத்தைத் தொடரும் ஆழ்மன நோக்கத்துடன் உள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.