வயலுக்கு வந்த யானைகள் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் காட்டுப்பகுதிக்கு துரத்தப்பட்டது
வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட மக்கிளானை பள்ளிமடு விவசாய கண்டத்தில் வருகை தந்த யானைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சத்த வெடி மூலம் காட்டுப் பகுதிக்குத் துரத்தப்பட்ட சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
மக்கிளானை பள்ளிமடு விவசாய கண்டத்தில் தொடர்ச்சியாக யானைகளின் வருகையைத் தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன், இரவு நேரங்களில் வயல் காவல் செய்வதில் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
வயல் பகுதிக்குப் பிரவேசித்த யானை வயல் நிலங்களை அழித்து, விவசாயிகள் செய்கை செய்யப்பட்ட சோளம் மற்றும் கச்சான் என்பவற்றை அழித்து நாசம் செய்துள்ளதுடன், வயல் காவலாளியின் குடிசையையும் துவம்சம் செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிகளுக்கு யானைகள் தொடர்ச்சியாக வருகை தருவது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் விடுத்த பட்சத்தில் கிரான் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வருகை தந்து சத்த வெடி மூலம் யானையைக் காட்டுப் பகுதிக்கு விரட்டுகின்றனர்.
ஆனால் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்றதும் சிறிது நேரம் கழித்து மீண்டும் யானைகள் வயல் பகுதிக்கு வருகை தருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
யானை தொல்லையிலிருந்து விவசாயத்தினை பாதுகாப்பதா அல்லது வெள்ளம் மற்றும் நோய் என்பவற்றிலிருந்து விவசாயத்தினை காப்பாற்றுவதா அல்லது எங்களின் உயிரைக் காப்பாற்றுவதா என்ற கவலையில் எங்களது ஒவ்வொரு நாளையும் கழிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான பிரச்சனைகள் தொடர்ச்சியாக வரும் நிலையில் வங்கிகளின் கடன் மற்றும் நகைகளை அடகு வைத்து விவசாய செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தொடர்ச்சியாகக் கடன் சுமையுடன் கடன்காரனாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆகவே இவ்வாறான பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு யானை பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









