இலங்கையில் நெறிமுறையற்ற யானைகள் சரணாலயங்கள்: குற்றம் சுமத்தும் சர்வதேச அமைப்பு
இலங்கை உட்பட பல நாடுகளில் உள்ள யானை சரணாலயங்கள் நெறிமுறையற்றவை மற்றும் கொடூரமானவை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லண்டனை தளமாகக் கொண்ட ஆசிய யானைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டன்கன் மெக்நாயர்(Duncan McNair) இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இந்த சரணாலயங்கள் பணத்திற்காகவே அனைத்தையும் செய்கின்றன என்று அவர் அமெரிக்க பத்திரிக்கையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
யானை தாக்குதல்
தாய்லாந்தில் சரணாலயம் ஒன்றை பார்வையிடச் சென்ற, சுற்றுலாப் பயணி ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆசிய யானைகள் நிபுணர், இந்த யானைகள் சரணாலயங்கள் குறித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நவர்ரா பல்கலைக்கழகத்தில் சட்ட மாணவியான 22 வயதான பிளாங்கா ஓஜாங்குரென் கார்சியா கடந்த வாரம் யானையால் கொல்லப்பட்டார்.
யானை ஒன்றை அதன் பாகன் குளிக்கச்செய்தபோது, குறித்து 50 வயதான யானை அதன் தும்பிக்கையால் தமது நாட்டு மாணவியை தாக்கிக் கொன்றதாக ஸ்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் இந்த சம்பவத்தின்போது குறித்த யானை எவ்வாறு நடத்தப்பட்டது என்ற விடயம் வெளியாகவில்லை.
யானை சரணாலயங்கள்
ஆனால், இந்த சம்பவம், சுற்றுலாப் பயணிகளை விலங்குகளுடன் நெருங்கிப் பழகுவதாக வாக்குறுதி அளித்து ஈர்க்கும் யானை சரணாலயங்கள், உண்மையில் எவ்வளவு பாதுகாப்பானவை என்பது குறித்த கேள்விகளை எழுப்புவதாக டன்கன் மெக்நாயர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வணிக சுரண்டலுக்காக சிறைபிடிக்கப்பட்ட அனைத்து யானைகளையும் போலவே இருந்த யானையும் முற்றிலும் இயற்கைக்கு மாறான நிலையில், தீவிர மன அழுத்தத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
யானைகள் மென்மையான மற்றும் புத்திசாலித்தனமான விலங்குகள் என்றாலும், அவற்றின் "அமைதி" என்பது அவை அடக்கப்பட்டவை என்று அர்த்தமல்ல என்று மெக்நாயர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |