கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி : வெளியாகியுள்ள தகவல்
கனேடிய(Canada) பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்தியருமான சந்திரா ஆர்யா(Chandra Arya) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
கனடா நாட்டின் பிரதமராக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) பதவி வகித்த நிலையில், அண்மைய காலமாக சொந்த கட்சியிலும், நாட்டு மக்கள் மத்தியிலும் அவரது பதவி தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
பிரதமர் பதவி
இந்த நிலையில் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
எனினும் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் பிரதமராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவரே பிரதமராக பதவியேற்பார்.
அந்த வகையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பை எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி நடத்த ஆளும் லிபரல் கட்சி முடிவு செய்துள்ளது. இதில் அதிக வாக்குகள் பெறுபவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
அவரே கனடாவின் புதிய பிரதமராகவும் பதவியேற்பார். இந்த நிலையில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக லிபரல் கட்சி எம்.பி.யும், இந்தியருமான சந்திரா ஆர்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
சந்திரா ஆர்யா
கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவரான சந்திரா ஆர்யா, தற்போது கனடாவின் ஒட்டாவா மாகாண எம்.பி.யாக இருந்து வருகிறார்.
பிரதமர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து சந்திரா ஆர்யா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
"கனடா தனது தலைவிதியை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது. கனடாவை ஒரு இறையாண்மை கொண்ட குடியரசாக மாற்ற விரும்புகிறேன் .
இதை சாத்தியமாக்க ஒதுக்கீட்டின் அடிப்படையில் அல்லாமல் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிசபையுடன் ஒரு சிறிய மற்றும் திறமையான அரசாங்கத்தை வழிநடத்த விரும்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் சந்திரா ஆர்யா மற்றும் முன்னாள் எம்.பி பிராங்க் பெய்லிஸ் ஆகிய இருவர் மட்டுமே பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதை முறையாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |