அம்பாறையில் தீவிரமடையும் யானை - மனித மோதல்: நிரந்தரப் பாதுகாப்பு வழங்குமாறு விவசாயிகள் அவசர கோரிக்கை
அம்பாறை மாவட்டத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் காட்டு யானை - மனித மோதலினால் அப்பாவி மக்களின் உயிர்களும், விவசாயிகளின் வாழ்வாதாரமான பெருமளவிலான பயிர்களும் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக உகன பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகாகண்டிய கிராமத்தில் காட்டு யானைக் கூட்டம் புகுந்து பாரிய பயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் இரவு வேளையில் மகாகண்டிய கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைக் கூட்டம், அப்பகுதி விவசாயிகளின் குடும்ப வாழ்வாதாரத்திற்கு ஒரே நம்பிக்கையாக இருந்த சுமார் 200 தென்னை மரங்களை முற்றிலுமாக வேரோடு பிடுங்கி அழித்துள்ளது.
வேதனைக்கு உள்ளாகியுள்ள விவசாயிகள்
பல ஆண்டுகளாகத் தமது பிள்ளைகளைப் போலக் கஷ்டப்பட்டு வளர்த்துப் பராமரித்து வந்த தென்னை மரங்கள் கண்முன்னே அழிக்கப்பட்டுள்ளமையால் விவசாயிகள் மிகுந்த கையறு நிலைக்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர்.

அம்பாறையின் பல பகுதிகளைப் போன்றே மகாகண்டிய கிராமமும் மாலை வேளை நெருங்கியதும் அச்சமூட்டும் சூழ்நிலைக்குள் தள்ளப்படுகின்றது.
கிராமம் முழுவதும் காட்டு யானைகள் சுற்றித் திரிவதால், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இரவு நேரங்களில் நிம்மதியாக உறங்க முடியாமல் கடுமையான மன அழுத்தத்துடனும் மரண பயத்துடனும் நாட்களைக் கழித்து வருகின்றனர்.
அப்பகுதியில் வனவிலங்குச் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டிருந்த போதிலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தமது கடமைகளையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உரிய முறையில் நிறைவேற்றவில்லை எனக் கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும், கிராமத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகள் உரிய முறையில் பராமரிக்கப்படாமையால், அவற்றினால் கிராமத்திற்கு எவ்விதப் பாதுகாப்பும் கிடைப்பதில்லை எனவும் அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கோரிக்கை

மகாகண்டிய மற்றும் அம்பாறை மாவட்ட விவசாயிகள் எந்தவொரு அரசியல் சலுகைகளையும் கோரவில்லை. மாறாகத் தமது உயிர்களையும் பயிர்களையும் பாதுகாத்துத் தருமாறு பின்வரும் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.
தமது கடின உழைப்பால் விளைந்த பயிர்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நிர்க்கதியாகியுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் உடனடியாக நியாயமான இழப்பீட்டை வழங்க வேண்டும். சேதமடைந்துள்ள யானை வேலிகளை உடனடியாகச் சீரமைத்து, முறையாகப் பராமரிப்பதன் ஊடாகக் கிராமத்திற்கு நிரந்தரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளின் பணிகளை முறைப்படுத்தி, இரவு நேரக் கண்காணிப்புகளை அதிகரிப்பதன் மூலம் கிராம மக்களின் உயிர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டின் உணவு உற்பத்திக்குப் பெரும் பங்களிப்புச் செய்யும் விவசாயிகளைத் தொடர்ந்தும் இவ்வாறான ஆபத்துக்களுக்குள் தள்ளுவதைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு பெற்றுத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.



