தமிழர்களின் நெற்செய்கையை அபகரித்து யானைவேலி அமைக்கும் செயற்பாடு! ரவிகரன் எம்.பி வழங்கியுள்ள உறுதி
கூமடுகண்டலில் தமிழர்களின் நெற்செய்கையை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் அத்துமீறி யானைவேலி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளமை குறித்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கொக்குத்தொடுவாய் விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிடப்பட்டது.
அத்தோடு, இது தொடர்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடனும், கமநலசேவைநிலைய உத்தியோகத்தர்களுடனும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கலந்துரையாடி நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
உரிய நடவடிக்கை
அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் உரிய இடங்களுக்குத் தெரியப்படுத்தி மகாவலி அதிகாரசபையின் இத்தகைய அத்துமீறல் செயற்பாட்டு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் தம்மால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அதேவேளை கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையப்பிரிவில் 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களுக்குப் பயன்படுத்தப்படும் கோட்டக்கேணி தொடக்கம் எரிஞ்சகாடு வரையான விவசாய பாதை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாரிய போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கடுமையான முயற்சியால் அடுத்த வருடம் குறித்த வீதியைச் சீரமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோரிக்கை
இருப்பினும் தற்போது செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கை அறுவடையை எடுத்து வருவதற்கு தற்காலிக சீரமைப்பு ஏற்பாட்டைச் செய்து தருமாறு இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அந்தவகையில் குறித்த விடயம் தொடர்பிலும் தம்மால் கவனம் செலுத்தப்படுமென இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



