யானை தாக்குதல் : இருவர் படுகாயம்
முல்லைத்தீவில் ஆண்டான்குளம் ஆலங்கடவை பகுதியிலுள்ள தமது விவசாய வயல்களில் இரவு காவல் கடமைகளை மேற்கொள்வதற்காக சென்ற இரு விவசாயிகள் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
வயல்களுக்குள் திடீரென்று உள்நுழைந்த காட்டு யானைகள் வயல் நிலங்களை சேதப்படுத்தியதுடன் காவல் கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.
இதில் காயமடைந்த 38 மற்றும் 44 வயதுடைய இரு விவசாயிகள் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், தமது வயல் நிலங்களுக்கு பாதுகாப்பு மின்சார வேலிகள் நீண்டகாலமாக அமைக்கப்படவில்லை இதனால் காட்டு யானைகள் தமது வயல் நிலங்களுக்குள் பிரவேசிக்கின்றது.
இரவு காவல் கடமைகளுக்கு செல்லும் விவசாயிகள் பலர் மீது தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதுடன் இரவில் அச்சமடைந்த நிலையில் தமது இரவு காவல் கடமைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
எமது உயிர்களைப் பாதுகாப்பதற்கு இங்குள்ள அதிகாரிகள் . மக்கள் பிரதிநிதிகள் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இதன்போது விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.