கொக்குத்தொடுவாயில் காட்டு யானை தாக்குதல்: குடும்பஸ்தர் படுகாயம் - அச்சத்துடன் வாழும் மக்கள் விடுக்கும் கோரிக்கை
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த 30.09.2026 அன்று மாலை இடம்பெற்றுள்ளது.
கொக்குத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராசா (வயது 48) என்பவரே காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
மயக்கமடைந்த நிலையில் கிடந்த நபர்
சம்பவத்தன்று மாலை வேளையில் தனது மாடுகளைப் பட்டிக்கு அழைத்து வருவதற்காக மேய்ச்சல் பகுதிக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், மாடுகள் மட்டும் தாமாகவே பட்டிக்கு வந்துள்ளன.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரைத் தேடி மேய்ச்சல் பகுதிக்குச் சென்றபோது, காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் மயக்கநிலையில் கிடந்த அவரை மீட்டுள்ளனர்.

பின்னர், அவரை உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அச்சத்துடுன் வாழும் மக்கள்
கொக்குத்தொடுவாய் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டுயானைகளின் நடமாட்டமும், மனிதர்களைத் தாக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
காட்டுயானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.