மட்டக்களப்பில் யானை தாக்கி உயிரிழந்த இளம் தாயின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு
மட்டக்களப்பில் யானை தாக்குதலில் உயிரிழந்த இளம் தாயின் குடும்பத்துக்கு வவுணதீவு பிரதேச செயலகம் உடனடியாக ஒரு இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்கியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முதற்கட்டமாக குறித்த இழப்பீட்டு தொகையானது இன்று (05) வைத்தியசாலையில் வைத்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தாய் உயிரிழப்பு
ஆயித்தியமலை மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக படுகாயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றது.
இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி சுற்றுலாதுறை மாவட்ட பணிப்பாளரும் மட்டு. மாநகரசபை உறுப்பினருமான எஸ்.சுரேஸ்றொபேட், பிரதேச செயலாளர் மற்றும் கிழக்கு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
காசோலை வழங்கி வைப்பு
இதனையடுத்து பிரதேச செயலகம் ஊடாக உயிரிழந்த இளம் தாயின் குடும்பத்திற்கு உடனடியாக இழப்பீடாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து இதற்கான காசோலையை மட்டு போதனா வைத்தியசாலையில் வைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் வழங்கி வைத்தனர்.




