75 இலட்சம் மின் பாவனையாளர்கள் பாதிப்பு - அநுர அரசைக் கடுமையாகச் சாடிய சஜித்
நாட்டில் அதிகரித்துள்ள கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என்றும், நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற மோசடிகளால் மக்கள் மறைமுகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியுள்ளார்.
அம்பாந்தோட்டை பிரதேசத்திலுள்ள விகாரைகளுக்கு நேற்று (12.04.2026) விஜயம் மேற்கொண்ட பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல் மேடை வாக்குறுதி
நிலக்கரி தட்டுப்பாட்டு நட்டத்தை மக்கள் மீது சுமத்தவே முடியாது! பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு திட்டவட்டமான அறிவிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளை நம்பி மக்கள் இந்த அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், இன்று மின்சாரக் கட்டணம், எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்.
மக்களின் இந்த அவல நிலைக்கு அரசு எப்போது தீர்வை வழங்கப்போகின்றது? நிலக்கரி இறக்குமதியில் முறைகேடுகள் நடக்கவில்லை என அரசு முதலில் கூறியது. பின்னர் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டது. கணக்காய்வாளர் அறிக்கையின் மூலம் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்த மோசடிகளால் ஏற்பட்டுள்ள நட்டத்தை அரசு மறைமுகமாக மக்கள் மீதே சுமத்தி வருகின்றது.

தரமற்ற நிலக்கரியால் போதிய மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாதுள்ளது. இதனால் டீசல் மின் நிலையங்களைப் பயன்படுத்தி மின்சாரத்தைப் பெற வேண்டியுள்ளது.
பாதிப்பு
நிலக்கரியை விட டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அதிக செலவாகும். இந்த மேலதிகச் செலவு இறுதியில் மின்சாரப் பாவனையாளர்கள் மீதே சுமத்தப்படுகின்றது.
75 இலட்சம் மின் பாவனாளர்கள் இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரக் கட்டணம், எரிபொருள், எரிவாயு, மருந்துகள் மற்றும் உரம் ஆகியவற்றின் விலைகளை உடனடியாகக் குறைத்து, மக்கள் வாழக்கூடிய சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும்.
மக்களை வாழ வைப்பதே ஓர் அரசின் பிரதான பொறுப்பாகும். மக்களைக் காக்கும் பொருட்டு அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றது என்றார்.