ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் விதிகளுக்கமைய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் 2025 டிசம்பர் 28 ஆம் திகதியிடப்பட்ட 2468/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகை ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி, வைத்தியசாலைகள், பராமரிப்பு நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற நிறுவனங்களில் நோயாளர்களைப் பராமரித்தல், அனுமதித்தல், பாதுகாத்தல், உணவளித்தல் மற்றும் சிகிச்சையளித்தல் தொடர்பான அனைத்து சேவைகள். நோயாளர் காவு வண்டி சேவைகள், பயணிகள் அல்லது பொருட்கள் போக்குவரத்துக்கான பொது போக்குவரத்து சேவைகள், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புடன் தொடர்புடைய அனைத்து சேவைகள்.
அத்தியாவசியப் பொருட்கள்
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், பாதுகாத்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான சேவைகள். அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கள மட்ட அதிகாரிகளால் ஆற்றப்பட வேண்டிய அனைத்து சேவைகள்.

இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள், உள்ளூராட்சி நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் நீர் வழங்கல், மின்சாரம், கழிவுநீர் அகற்றும் முறைமை, தீயணைப்பு, கழிவு சுத்திகரிப்பு மற்றும் குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அனைத்து சேவைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.