20 வீதத்திற்கும் மேல் மின் கட்டணத்தை குறைக்குமாறு பரிந்துரை
மின் கட்டணத்தை இருபது வீதத்துக்கும் மேல் குறைக்க வேண்டும் என நாடாளுமன்ற மேற்பார்வைக்குழு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அத்துடன் தற்போதுள்ள சூழ்நிலையின் அடிப்படையில் மின் கட்டணத்தை 33 வீதத்தால் குறைக்க முடியும் என ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் மின் கட்டணத்தை 18 வீதத்தால் குறைக்க ஆணைக்குழுவிடம் மின்சார சபை முன்மொழிந்துள்ளது.
கட்டண குறைப்பு பரிந்துரை
இதேவேளை மின்சார வாரியத்தின் 18 வீதம் மற்றும் உண்மையில் குறைக்கக்கூடிய விகிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 20 வீதத்திற்கும் மேலாக கட்டணங்களைக் குறைக்க குழு பரிந்துரைத்துள்ளது.
இதேநேரம் துண்டிக்கப்பட்ட பின் மீண்டும் மின் இணைப்பை ஏற்படுத்த அறவிடப்படும் 3000 ரூபா கட்டணத்தை 1500 ரூபாவாக குறைக்கவும் நாடாளுமன்ற மேற்பார்வைக்குழு ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
அமைச்சரின் தகவல்
இதேவேளை கடந்த அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் வைத்து கடந்த 21ஆம் திகதி உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை கூறியிருந்தார்.
அதன்படி, வீடுகள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் என்ற வகையில் அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட 18 சதவீத கட்டண உயர்வு இங்கு முழுமையாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் கடந்த அக்டோபர் மாதம் சுற்றுலாத்துறைக்காக அதிகரிக்கப்பட்ட 12 சதவீத மின் கட்டண உயர்வை முழுமையாக நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் 28 ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |