கனடா என் தாய் வீடு - தேர்தலில் போட்டியிடும் இளம் தமிழ்ப்பெண்
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத் தேர்தலில் போட்டியிட உள்ள தமிழ்ப்பெண், மக்களுக்கு சேவையாற்றுவதை கடமையாக கருதுவதாக கூறியுள்ளார்.
தமிழக மாவட்டம் மதுரையில் பிறந்தவர் அஞ்சலி அப்பாதுரை. தனது 6வது வயதில் பெற்றோருடன் கனடாவில் குடியேறியுள்ளார்.
சர்வதேச அரசியல் மற்றும் பருவநிலை கொள்கை பாடத்தில் பட்டம் பெற்ற இவர், ஐ.நா சபை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் பங்கேற்று பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.
அஞ்சலி அப்பாதுரை போட்டி
தற்போது இவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உட்கட்சித் தேர்தலில் போட்டியிட உள்ளார். தொண்டை புற்றுநோய் காரணமாக புதிய ஜனநாயக கட்சியின் தலைவரும், அம்மாகாண முதல்வருமான ஜான் ஹோர்கன் பதவி விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் டேவிட் எபிக்கு எதிராக அஞ்சலி அப்பாதுரை போட்டியிடுகிறார்.
I've answered the call of a movement. I've agreed to be the candidate and spokesperson. But this campaign belongs to you. JOIN: https://t.co/PARdGhFkdF #AnjaliForBC pic.twitter.com/kIpheDM4Ct
— Anjali Appadurai (@AnjaliApp) August 10, 2022
இந்தக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்பார். அதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டில் நடக்கும் தேர்தலிலும் அவரே முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார்.
நான் இந்த மண்ணை நேசிக்கிறேன்
எனவே அஞ்சலி அப்பாதுரை இந்த தேர்தலில் போட்டியிடுவது உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து அஞ்சலி அப்பாதுரை கூறுகையில்,
நான் கனடாவில் குடியேறியவள். நான் இந்த மண்ணை நேசிக்கிறேன். இது என் தாய் வீடு. எல்லா மனிதர்களும் சமம் என்று நான் நம்புகிறேன். மக்களுக்கு சேவை செய்வதை எனது கடமையாக கருதுகிறேன்.
மனித உரிமைகள் மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாக்க போராடுகிறேன். திட்டமிட்டு சரியாக செயல்பட்டால் பருவநிலை மாற்றத்தை தடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம். அப்படி செய்ய முடியும். அதனால் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன்' என தெரிவித்துள்ளார்.