வாக்காளர் பதிவேட்டில் மாற்றம் - யாழ்ப்பாணத்துக்கு ஆசனங்கள் 7இலிருந்து 6ஆகக் குறைப்பு
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு 2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டை உத்தியோகபூர்வமாக சான்றளித்துள்ளது.
இதன்படி, நாட்டில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 17,641,006 ஆகும். இது 2025 ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவேட்டுடன் ஒப்பிடுகையில் 90,835 பேரால் அதிகரித்துள்ளது.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
மாவட்டங்களுக்கிடையிலான வாக்காளர் விகிதாசாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி: - கொழும்பு மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனங்கள் 18 இலிருந்து 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனங்கள் 18 இலிருந்து 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஆசனங்கள் 7 இலிருந்து 6 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தின் ஆசனங்கள் 9 இலிருந்து 8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.
மக்கள் தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் சட்டரீதியான சமநிலையைப் பேணும் நோக்கில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட ஆசன ஒதுக்கீடுகள் தொடர்பான விபரங்கள் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளன.