மயக்க மருந்து கொடுக்கப்பட்ட வயோதிப பெண் 8 மாதங்களின் பின்னர் உயிரிழப்பு
மட்டக்களப்பில் கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் 8 மாதத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(29.10.2026) இடம்பெற்றுள்ளது.
கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய கணபதிப்பிள்ளை விஜயலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பேருந்துக்காக காத்திருந்த வயோதிபப் பெண்
கடந்த மார்ச் 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து இளம் தாய் ஒருவரும் அவரது 3 வயது 4 மாத பெண் குழந்தையும் உயிருடன் மீட்கப்பட்டதுடன், மற்றொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வவுணதீவு பாவக்கொடிச்சேனையைச் சேர்ந்த கணவன், மனைவியே கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்தில் தனியாகப் பேருந்துக்காகக் காத்திருந்த 65 வயதுடைய வயோதிபப் பெண்ணை இலக்கு வைத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும், அப்பகுதியில் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகம் எனக் கூறி, வயோதிபப் பெண்ணின் தங்கச் சங்கிலியைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுரை கூறி பேச்சுக் கொடுத்துள்ளனர்.
உயிரிழப்புக்கு காரணம்
மயக்க மருந்து கலந்த பானத்தை வழங்கி வயோதிபப் பெண்ணிடமிருந்து 7 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

சுமார் நான்கு மணித்தியாலங்களின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிறுநீரகப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (29) உயிரிழந்துள்ளார்.
கொள்ளையர்கள் வழங்கிய மயக்க மருந்தே அவரது உடல்நலப் பாதிப்புக்கும் உயிரிழப்புக்கும் காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.