எல் - நினோ நிலைமை! ஜனாதிபதி தலைமையில் பலசுற்று பேச்சுவார்த்தை - தயாராகும் திட்டங்கள்
எல் - நினோ காலநிலை நிலைமை குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதுடன், அதற்கு முகம்கொடுப்பதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் (16.06.2026) இடம்பெற்றிருந்தது. இதன்போது அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற ரீதியில், இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து, குறிப்பாக விவசாயம் உள்ளிட்ட உணவு உற்பத்தி மற்றும் நமது நீர் வளங்கள் போன்ற பல துறைகள் குறித்து ஏற்கனவே அவதானம் செலுத்தியுள்ளோம். ஜனாதிபதியின் தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
முழுமையாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்
அத்துடன், எதிர்வரும் ஜூலை - ஆகஸ்ட் காலப்பகுதியிலும், மறுபுறம் அடுத்த வருடத்திலும் ஏற்படக்கூடிய இத்தகைய சூழ்நிலைகள் குறித்து அமைச்சர்கள் தத்தமது அமைச்சுகளின் ஊடாக முழுமையாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து தற்போது கலந்துரையாடி திட்டங்களை தயாரித்து வருகின்றனர்.

குறிப்பாக, அடுத்த போக விவசாயச் செய்கையின் போது இந்த நிலைமைக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது குறித்தே ஆராயப்படுகிறது. ஏனெனில், வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட இது சார்ந்த குழுக்கள் இந்த சாத்தியமான நிலைமை குறித்து சில எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளன.
இவற்றையும் கருத்தில் கொண்டே எதிர்காலத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இதன் பாதிப்பைக் குறைத்து, தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை உரிய நேரத்தில் மேற்கொள்வதற்கே நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri