எல் நினோ காலநிலையால் இலங்கைக்கு காத்திருக்கும் அபாயம்
எல் நினோ காலநிலையால் ஏற்படும் விளைவுகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் தாக்கம் செலுத்துவதற்கான அபாயம் உள்ளதாக மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட புதிய அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ காலநிலை விவசாயத்துறைக்கு ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் வீழ்ச்சியடைவதற்கான அபாயம் உள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்
அத்துடன், எல் நினோ காலநிலை நிகழ்வு காரணமாக நாட்டின் பணவீக்கமும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல் நினோ காலநிலை நிகழ்வு நாட்டிற்கு இரு வழிகளில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். முதலாவது வறண்ட காலநிலை மூலமும், இரண்டாவது அதிக மழைவீழ்ச்சி மூலமும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இதனால் ஏற்படும் தாக்கம் தொடர்பில் உயர் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதால் இது ஒரு அபாயமாக பெயரிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட தாக்கத்தை விடக் குறைவான தாக்கமே நாட்டின் மீது ஏற்பட்டுள்ளது.
மத்திய வங்கி அறிக்கை
அதன் காரணமாக இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் ஸ்திரமாகப் பேணப்படும் என அனைத்துச் சுட்டிகளும் காட்டுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் மத்திய கிழக்கு நெருக்கடி தீவிரமடைவதும், காலநிலை மாற்றங்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக நிச்சயமற்ற தன்மையைச் சேர்க்கின்றன என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உலகளாவிய ரீதியில் இந்த ஆண்டு ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 80 அமெரிக்க டொலர் மட்டத்தில் காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 70 அமெரிக்க டொலர் மட்டத்தில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.