பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கல்விப் பிணை ஒப்பந்த மீறல்! அரசுக்கு 30 பில்லியன் ரூபாய் இழப்பு
வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி மற்றும் பயிற்சிகளைப் பெற்ற பின்னர், தங்களது கல்விப் பிணை ஒப்பந்தங்களை மீறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து அரசுக்கு சுமார் 30 பில்லியன் (3000 கோடி ரூபாய்) நிலுவையாக உள்ளதாக அரச நிறுவனங்கள் தொடர்பான குழுவான கோப் (COPE) தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
இந்த நிலையில், கல்விப் பிணை மற்றும் ஒப்பந்தங்களை மீறி வெளிநாடுகளுக்குச் சென்ற கல்வியாளர்களிடமிருந்து நிலுவைத் தொகையை மீளப் பெற்றுக்கொள்வதற்கான முறையான பொறிமுறையை உருவாக்குமாறு அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், பல்கலைக்கழகக் கட்டமைப்பு முழுவதிலும் இடம்பெறும் இத்தகைய ஒப்பந்த மீறல்களைத் தொடர்ந்து கண்காணித்து, அவற்றைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழு வலியுறுத்தியுள்ளது.