அரசின் தோல்வியால் மீண்டும் வங்குரோத்து நிலைக்கு நகரும் இலங்கை! முன்னாள் அமைச்சர் அபாய எச்சரிக்கை
அரசின் பொருளாதார முகாமைத்துவத்தின் தோல்வி மற்றும் இயலாமை காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடி நிலையை நோக்கி வேகமாகப் பயணித்துக்கொண்டிருக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கு முறையான மறுசீரமைப்புகள் உடனடியாக மேற்கொள்ளப்படாவிட்டால், கடந்த 2022 ஆம் ஆண்டில் நாடு அனுபவித்த இருண்ட பொருளாதாரப் பின்னடைவுக்கும் வங்குரோத்து நிலைமைக்கும் மீண்டும் தள்ளப்படுவதைத் தடுக்க முடியாமல் போகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசின் பொருளாதார நிர்வாக தோல்வி
"தற்போதைய அரசின் பொருளாதார நிர்வாகத் தோல்வி மற்றும் இயலாமை காரணமாக, நாடு மீண்டும் 2022 ஆம் ஆண்டைப் போன்ற கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வங்குரோத்து நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ஆட்சியாளர்களின் திறமையின்மையை மூடிமறைப்பதற்காக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் ஊடாக மக்களின் போராட்டங்களை அடக்கும் போக்கிலான அடக்குமுறைச் சூழல் நாட்டில் உருவாகியுள்ளது.
அண்மையில் விகாரமஹாதேவி பூங்காவிலும் அனுராதபுரப் பகுதியிலும் பௌத்த துறவிகளுக்கு எதிராக பொலிஸாராலும் சில தரப்பினராலும் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இந்த அடக்குமுறை வேலைத்திட்டம் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கூட இழக்கப்பட்டு, நாட்டின் ஆடைத் தொழில் உள்ளிட்ட ஏற்றுமதித்துறை கடுமையான ஆபத்துக்கு உள்ளாகும் அபாயமும் இப்போது உருவாகியுள்ளது.
நாட்டின் மொத்த பொதுக்கடன் நிலைமை
அதேநேரம் நாட்டின் மொத்த பொதுக்கடன் நிலைமை மிகவும் பயங்கரமான வகையில் உயர்ந்துள்ளது. 29.5 டிரில்லியன் ரூபாவாக இருந்த மத்திய அரசின் கடன் தொகை தற்போது 32 டிரில்லியன் வரை உயர்ந்துள்ளது.
உள்நாட்டுக் கடன் தொகை 18 டிரில்லியனில் இருந்து 19 டிரில்லியன் வரை அதிகரித்துள்ளது. 11.5 டிரில்லியனாக இருந்த வெளிநாட்டுக் கடன் தொகை தற்போது 12.7 டிரில்லியன் வரை உயர்ந்துள்ளது.
பல்வேறு 12 வகையான வரிகளை உயர்த்தியதன் காரணமாக, நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் 72 வீதத்திலிருந்து 57 வீதமாகக் குறைந்துள்ளனர்.
மேலும், இலங்கை உலகில் அதிக வரி செலுத்தும் நாடாக சர்வதேச சாதனைக்கு நெருங்கியுள்ளது. ஆசியாவில் பணவீக்கம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளதுடன், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களில் சுமார் 75 வீதம் தற்போது கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
இதுதவிர, பங்குச் சந்தையிலிருந்து 171 மில்லியன் டொலர் முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதுடன், பல பிரம்மாண்டமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன.
எரிபொருள்களின் விலைகள்
இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும். ரணில் விக்கிரமசிங்கவின் அரச காலத்தில் குறைந்திருந்த அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் எரிபொருள்களின் விலைகள், தற்போதைய ஆட்சியின் கீழ் பாரியளவில் அதிகரித்துள்ளன.

ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஒப்படைக்கும் போது 320 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்ரோல் லீற்றர் ஒன்று, இன்று 424 ரூபா வரை அதிகரித்து 104 ரூபாவால் அதிகரித்துள்ளது. 377 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 பெற்ரோல் லீற்றரர் இன்று 490 ரூபாவாகும். 304 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் 397 ரூபா வரை அதிகரித்து 93 ரூபாவால் அதிகரித்துள்ளது.
3 ஆயிரத்து 690 ரூபாவாக இருந்த எரிவாயு சிலிண்டர் இன்று 4 ஆயிரத்து 365 ரூபாவாகும். 292 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் விலை இன்று 330 ரூபாவைத் தாண்டி உயர்ந்துள்ளது.
இந்தப் பொருளாதாரத் தரவுகள் மற்றும் நெருக்கடி நிலைமையைத் தவிர்ப்பதற்கு முறையான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் சில மாதங்களில் நாடு மீண்டும் 2022 ஆம் ஆண்டில் அனுபவித்த இருண்ட பொருளாதார பின்தங்கிய நிலைமைக்கும் வங்குரோத்து நிலைக்கும் தள்ளப்படுவதைத் தடுக்க முடியாமல் போகும் என்றார்.
வீட்டில் தனியாக இருந்த யுவதி சடலமாக மீட்பு! வங்கிக்கு சென்று திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி