கல்வியியற் கல்லூரி வளாகங்களில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
உற்பத்திப் பொருளாதாரத்தை ஒரே நாளில் கட்டியெழுப்ப முடியாது. அதற்காக முழு தேசமும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டுமென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கல்வி அமைச்சுக்கு சொந்தமான 19 கல்வியியற் கல்லூரி வளாகங்களிலும் இடவசதிக்கு ஏற்ற வகையில் நாளாந்தம் பயன்படுத்தக்கூடிய பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு
கடும் குளிரான காலநிலை உள்ள நாடுகளில் கூட, பனிப்பொழிவு இல்லாத ஆறு மாத காலப்பகுதியில், அடுக்குமாடி குடியிருப்புகளின் தாழ்வாரங்களிலும் தொட்டிகளில் செய்கையில் ஈடுபட்டு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியின் கீழ் நாட்டின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் சூழலில், அரசாங்கம் மற்றும் நாட்டின் ஏனைய நிறுவனங்கள் உட்பட முழு மக்களும் பருவநிலை மாற்றம் போன்ற எதிர்கால அனர்த்த நிலைமைகளை வெற்றிகொள்வதற்கு உரிய முறையில் தயாராக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் எரிபொருள், எரிவாயு போன்ற அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதற்காக வரிசையில் நின்று நேரத்தைச் செலவழித்த யுகமும் நினைவுகூரப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |