கல்வியை வழங்கி மக்களையும் பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக்குவோம்: ஜனாதிபதி உறுதி
கல்வி, காணி, வீடு, வியாபார உரிமைகளை உறுதிப்படுத்தி, மக்களை பொருளாதாரத்தில் வலுவான பங்குதாரர்களாக மாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக மக்களை மாற்றுவதன் மூலம், சரிவடையாத வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பு முகத்துவாரத்தில் நடைபெற்ற ரன்திய உயன வீட்டுத் தொகுதியை பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.
கஜீமாவத்தையில் தீக்கிரை
இதன்போது 2010 ஆம் ஆண்டில் கஜீமாவத்தையில் தீக்கிரையான வீடுகளுக்கு பதிலாக 294 வீடுகள் அடங்கிய இந்த வீட்டுத்தொகுதியை ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
"பத்து வருடங்களுக்கு மேலாக காஜிமாவத்தை மக்கள் நரகத்தில் வசித்துள்ளனர். அந்த வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அதனால் இந்த குடியிருப்புகளை மக்களுக்கு விரைவில் கையளிக்க முடிந்துள்ளதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இது தொடர்பில் அதிக அக்கறை காட்டினார். இன்று நீங்கள் பெற்றுகொள்ளும் இந்த வீடு உங்களுக்கு மிகவும் மதிப்புள்ள சொத்தாகும்.
அதனைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. கடந்த பத்து வருடங்களாக கஷ்டப்பட்ட நீங்கள் இந்த வீடுகளை அடகு வைக்கவோ விற்கவோ கூடாது. இந்த வீடுகளை உங்கள் உயிரைப் போல பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இன்று வரையிலான இரண்டு வருடங்களுக்குள் நிம்மதியாக மூச்சு விடக்கூடிய சூழலை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது." என்றார்.